×

‘நியூரி ஆரா’ கட்டுமான நிறுவனத்தின் மெத்தனம் மாடியில் இருந்து விழுந்து அசாம் தொழிலாளி பலி: இன்ஜினியர், சூப்பர்வைசருக்கு போலீஸ் வலை

சென்னை: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் ‘நியூரி ஆரா’ கட்டுமான நிறுவனத்தின் மெத்தனப்போக்கால், பணியின்போது 2வது மாடியில் இருந்து விழுந்து அசாம் மாநில தொழிலாளி ஹெல்மெட் இல்லாத காரணத்தால், மண்டை உடைந்து பலியானார். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாதது மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தாமல் இருந்ததே இந்த பலிக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சென்னை அடுத்த ஆவடி திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகர், சுதர்சனம் தெருவில் ‘நியூரி ஆரா’ என்ற கட்டுமான நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பு 5 மாடிகளை கொண்டது. இதன் கட்டிட பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்த 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பாடி, ஜெகதாம்பிகை நகர், வள்ளலார் தெருவைச் சார்ந்த தனியார் கம்பெனியில் இருந்து அசாம் மாநிலத்தைச் சார்ந்த இனாமுல் ஹக் (31), சபிகுல் (25) ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களது முக்கிய பணி, சுவர்களில் இயந்திரம் கொண்டு துளையிடுவது. இதற்காக இவர்களுக்கு ெஹல்மெட், ரப்பர் கையுறை உள்பட பல்வேறு பாதுகாப்பு சாதனங்களை கட்டுமான நிறுவனம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அசாம் தொழிலாளர்கள் இருவரும் சுவர்களில் துளையிடும் பணிகளை இயந்திரம் மூலம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, இனாமுல் ஹக் இரண்டாவது மாடியில் பாத்ரூமில் டிரில்லிங் மிஷன் மூலம் துளை போட்டு கொண்டு இருந்தார்.

அந்த நேரம் திடீரென்று அவர் அறையில் இருந்து தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் கையில் தாக்கியதா அல்லது பாத்ரூம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு ெசய்யாமல் விட்டதால், வழுக்கி கீழே விழுந்தாரா என்பது தெரியவில்லை. அவர் லிப்ட் பாதையில் விழுந்தார், தலையில் ஹெல்ெமட் இல்லாத காரணத்தால், கீழே விழுந்த அவரின் தலை நொறுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரின் தலையை சுற்றி ரத்தம் குளம்போல காணப்பட்டது. இதனை பார்த்த சக ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், அவர்கள் வந்து பரிசோதனை செய்தபோது இனாமுல் ஹக் இறந்துவிட்டதாக கூறினர்.  தகவலறிந்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நியூரி ஆரா கட்டுமான நிறுவனத்தின் இன்ஜினியர் உதயகுமார், தனியார் ஒப்பந்த நிறுவன சூப்பர்வைசர் காஜா மொய்தீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.   நியூரி ஆரா கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதி செய்து தரப்படவில்லை. நிர்வாகத்தினர் மெத்தனமாக இருந்து உள்ளனர்.

இதனால், ஒப்பந்த ஊழியர் பணியாற்றும் போது கீழே விழுந்து உயிர் பலியாகி உள்ளார். தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்காத நியூரி ஆரா கட்டுமான நிறுவனத்தின் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் குமுறலுடன் தெரிவிக்கின்றனர்.

Tags : Assam , ‘Nuri Ara’, Construction Company, Assam Worker, Engineer, Supervisor,
× RELATED அசாமில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் கைது: கூட்டாளியும் சிக்கினான்