×

நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் சேதமடைந்த சாலைகள் மறுசீரமைப்பு பணிக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை:தமிழகத்தில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் நிவர், புரவி புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை உட்பட 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. குறிப்பாக, சென்னை மாநகர சாலைகள், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, செய்யாறு, வாணியம்பாடி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல கோட்டங்களில் நிரந்தரமாக சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலைகளில் நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிக்கு ரூ.392 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதில், கடந்த 2021-22ம் நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும், 2022-2023ம் நிதியாண்டிற்கு ரூ.292 கோடியும் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை கொண்டு 108 மாநில நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.269 கோடியும், 80 மாவட்ட முக்கிய சாலை பணிகளுக்கு ரூ.53.63 கோடியும், 151 மாவட்ட இதர சாலை பணிக்கு ரூ.66 கோடி என மொத்தம் ரூ.390 கோடியில் வெள்ள நிரந்தர மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகர சாலைகளில் சிறு பாலங்கள், பாலங்கள் மறு சீரமைப்பு பணிக்கு ரூ.20 கோடியும், வடிகால் பணிக்கு ரூ.148 கோடி மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, சென்னை மாநகர சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையில் 5 இடங்களிலும், உள்வட்ட சாலையிலும், ஜிஎன்டி சாலையிலும், ஜிஎஸ்டி சாலையில் 2 இடங்களிலும், தாம்பரம்-முடிச்சூரில் சிறு பாலங்கள், பாதுகாப்பு சுவர், குரோம்பேட்டை அருகே ஜிஎஸ்டி சாலையில் வடிகால், உள்வட்ட சாலையில் வடிகால்கள்,  பல்லாவரம்- துரைப்பாக்கம் சிறு வடிகால், மேடவாக்கம்-சோழிங்நல்லூர் சாலை வடிகால், தாம்பரம்-முடிச்சூர் சாலையில் 3 இடங்களில் வடிகால் அமைக்கப்படுகிறது.

இதே போன்று, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், நாகை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் சிறுபாலங்கள், பாதுகாப்பு சுவர், வடிகால் வசதிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2021-22ம்  நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும், 2022-2023ம்  நிதியாண்டிற்கு ரூ.292 கோடியும் ஒதுக்கப்படுகிறது

Tags : Nivar ,Purevi , Nivar, Purevi, Rehabilitation, Allocation, Government of Tamil Nadu
× RELATED மத்திய கால கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்