×

குடும்ப சொத்தை பிரித்து தராததால் தாயின் தலையை துண்டித்து கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை: புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை: குடும்ப சொத்தை பிரித்து தராததால் தாயின் தலையை துண்டித்து கொன்ற மகனுக்கு மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மறவன்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி திலகராணி (45). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். விவசாயியான தங்கராஜை, அவரது மனைவி திலகராணி கொன்றதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.  இதில் கொலை குற்றம் நிரூபிக்கப்படாததால் திலகராணி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதில் குடும்ப சொத்துகளை பிரித்து மகன்களுக்கு தராமல் முழுமையாக அபகரிக்க முயன்றதோடு தந்தை தங்கராஜை, தாய் திலகராணி தான் கொன்றுவிட்டார் என மூத்த மகனான ஆனந்த்(27) கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018 மார்ச் 18ம்தேதி காலை 8.30 மணியளவில் மறவன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தாய் திலகராணியின் கழுத்தை ஆனந்த் அரிவாளால் அறுத்து தலையை துண்டித்து கொன்றார். இதுதொடர்பாக மழையூர் போலீசார் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியா, தாயின் தலையை வெட்டி கொன்ற ஆனந்துக்கு தூக்கு தண்டனையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து ஆனந்த் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் நேற்று மாலை அடைக்கப்பட்டார்.

Tags : Jukhota Maghla Court , Family property, mother, murder, execution
× RELATED நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு...