×

அதிக தொகைக்கு கேட்டதால் ஏலத்தில் முதலிடம் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்குகிறது: அமித்ஷா தலையாட்டினால் கைமாறும்

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசுக்கு சொந்தமான விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, 2006ம் ஆண்டு வரையில் லாபத்தில்தான் இயங்கி வந்தது. 2007ம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட பிறகு, அதற்கு சரிவு தொடங்கியது. 2020, ஜனவரி நிலவப்படி ஏர் இந்தியா நிறுவனம் ரூ.60 ஆயிரத்து 74 கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. இதனால், இந்த நிறுவனத்தை தனியாருக்கு நூறு சதவீத பங்குடன் விற்பதற்கான ஏல அறிவிப்பை, கடந்தாண்டு ஜனவரியில் ஒன்றிய அரசு அறிவித்தது.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஏல நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போதே, இந்த ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் அதிக கேட்பு தொகையுடன் முன்னணியில் இருந்து வந்தது. அதனால், இந்த நிறுவனத்துக்கு ஏர் இந்தியா கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்தது. பின்னர், இந்த ஏல கேட்புத்தொகையில் மாற்றம் ஏற்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் ஓரளவுக்கு குறைந்த வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் ஏல நடவடிக்கையை ஒன்றிய அரசு தொடங்கியது.  இறுதி ஏல அறிக்கையை சமர்ப்பிக்கும்படி போட்டியில் பங்கேற்ற நிறுவனங்களை கேட்டுக் கொண்டது.  இதற்கு கடந்த செப்டம்பர் 15ம்  தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

 இதில்,  இந்த நிறுவனத்தை வாங்கும் ஏலத்தில், டாடா குழுமம் மீண்டும் அதிக தொகையை குறிப்பிட்டு முதலிடம் பிடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கும் நடவடிக்கையை அமல்படுத்துவதற்காக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு செயல்பட்டு வருகிறது. டாடா சன்ஸின் ஏலம்,  இந்த குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. ஆனால், ஏலத்தை அமித்ஷா தலைமையிலான குழு இன்னும் முடிவு செய்யவில்லை என்று இந்த குழுவுக்கான செயலாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Tata Sons ,Air India ,Amit Shah , Amount, Auction, Air India, Tata Sons, Amitsha
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...