69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றக் கூடாது மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையில் மட்டுேம பதவி உயர்வு அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘தமிழகத்தில் அரசுப் பணியில் மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும்,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பணி நியமனங்களுக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளின் போட்டித் தேர்வின் மூலம் நேரடியாக நியமிக்கப்படும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும், கடந்த 2003ம் ஆண்டு முதல் பணிமூப்பு அடிப்படையில் சுழற்சி முறையில் பதவி உயர்வு இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வந்தது. இதை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்த சுழற்சி முறையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனுவை, 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 இந்நிலையில், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதியில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து 60க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘அரசு ஊழியர்கள் சட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், சட்டத்துக்கு புறம்பான செயலாகும். இந்த நடைமுறையால் 69 சதவீதத்துக்கு மேலாக இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் தகுதி அடிப்படையில், பணி மூப்பு பட்டியலை தயார் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும்,’ என தெரிவித்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீண்டும் உறுதி செய்தது. இந்நிலையில், தமிழகத்தில் மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர், பொதுப் பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தூர் என்பவர் உட்பட பலர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.

 சில தினங்களுக்கு முன் இது விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “குறைந்த மதிப்பெண் பெற்ற பலருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது,’ என தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘உயர் நீதிமன்றத்தை அணுகிய குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பொருந்தும். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாரராக இல்லாதவர்கள் கூட இந்த அவமதிப்பு வழக்கில் மனுதாரராக இருக்கின்றனர். அதனால், இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை,’ என தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பதவி உயர்வு உத்தரவு, ஒரு சில நபர்களுக்கானது அல்ல. இது சமூக நீதியை உறுதி செய்வதற்காக வழங்கப்பட்ட இடஒதுக்கீடு. இதை எவ்வாறு உயர் நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்?’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த 27ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.  இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியது. அதில், ‘தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப் பணியில் இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்க முடியாது.

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும். வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றுமின்றி, அனைத்து ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்த உத்தரவை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அடுத்த 12 வாரத்துக்குள் அமல்படுத்த வேண்டும். இந்த வழக்கில் ஏற்கனவே அளிக்கப்பட்ட உத்தரவு மீண்டும் உறுதி செய்யப்படுகிறது,’ எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு உறுதி

இந்த வழக்கில் அதிமுக ஆட்சியில் தலைமை செயலாளராக இருந்த கே.சண்முகம், முன்னாள் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்த குமார், முன்னாள் பொதுப்பணித் துறை செயலாளர் கே.மணிவாசன் உட்பட 10 அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இவர்கள் அனைவரும் அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினம் அவர்களுக்கான தண்டனை விவரம் பற்றி விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Related Stories:

More
>