×

தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட இங்கிலாந்து பயணிகளுக்கு 10 நாள் கட்டாய தனிமை: ஒன்றிய அரசு பதிலடி

புதுடெல்லி: வரும் 4ம் தேதி முதல்  இங்கிலாந்தில் இருந்து  இந்தியா வரும் பயணிகள் அனைவரும் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு பதிலடி கொடுத்துள்ளது. வெளிநாட்டு பயணிகளை அனுமதிப்பதற்கான விதிமுறைகளை இங்கிலாந்து அரசு சமீபத்தில் அறிவித்தது. அதில், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு இருந்தாலும், இங்கிலாந்து வரும் இந்தியர்கள் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தது. மேலும், கோவிஷீல்டுக்கும் ஒப்புதல் அளிக்க மறுத்தது. இதற்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதேபோன்ற பதில் நடவடிக்கை இங்கிலாந்து பயணிகள் மீது எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

இதையடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டும் அங்கீகாரம் அளித்த இங்கிலாந்து அரசு, அதை செலுத்தி கொண்ட இந்தியர்கள் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று புதிய விதிமுறையை அறிவித்தது. இதனால், அந்நாட்டின் மீது ஒன்றிய அரசு கடும்  அதிருப்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு பயணிகளுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வரும் 4ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. அந்த கட்டுப்பாடுகளின் விவரம் வருமாறு:\

* இங்கிலாந்தில் இருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் தேவை.
* இந்தியா வந்ததும் விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
* இந்தியா வந்த பிறகு 8 நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
* இங்கிலாந்தில் எந்த தடுப்பூசியை போட்டவர்களாக இருந்தாலும், இந்தியாவுக்கு வந்த பிறகு 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தபடுவார்கள்.
- ஒன்றிய அரசின் இந்த அதிரடி பதிலடியால், இங்கிலாந்து அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.


Tags : UK ,United States , Vaccine, UK, Compulsory Isolation, Union Government, Union
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...