×

தமிழகத்தில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100ஐ தாண்டியது: டீசல், வர்த்தக காஸ் விலையும் உயர்வு; ஒன்றிய அரசின் நடவடிக்கையால் மக்கள் அதிர்ச்சி

சென்னை: ஒன்றிய அரசு மேற்கொண்ட தொடர் விலையேற்றத்தின் காரணமாக, தமிழகத்தில் பெட்ரோல் விலை மீண்டும் நேற்று ரூ.100ஐ தாண்டியது. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.36.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், வர்த்தக காஸ் சிலிண்டர் என மூன்றின் விலையும் ஒரே நேரத்தில் உயர்த்தப்பட்டதால், மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி  அமைக்கப்படுகிறது. காஸ் சிலிண்டர் விலை மாதம் ஒரு முறை மாற்றப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை நடப்பாண்டின் ஜனவரியில் இருந்து தொடர்ந்து விலையேற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டன. இதனால், கடந்த மார்ச் மாத இறுதியில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐயும், டீசல் ரூ.95ஐயும் எட்டியது. மிக அதிகபட்சமாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108க்கு அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெட்ரோல் ரூ.103ஐ தொட்ட நிலையில், திமுக அரசு மாநிலத்திற்கான வரி வருவாயில் ரூ.3ஐ குறைத்து ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அறிவித்தது. இதனால், மாநிலம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.103ல் இருந்து ரூ.100க்கு கீழ் வந்தது.

இந்நிலையில், கடந்த மாதத்தில் இருந்து அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக தினமும் 15 காசு முதல் 30 காசு வரையில் அதிகரித்து வருகிறது. நேற்று நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 22 காசும், டீசல் 29 காசும் அதிகரிக்கப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் தினம் பெட்ரோல் ரூ.99.36க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று 22 காசு அதிகரித்து, ரூ.99.58க்கு விற்பனை செய்யப்பட்டது. சேலம் மாவட்ட பகுதியில் பெட்ரோல், நேற்று முன்தினம் விலையில் இருந்து 21 காசு அதிகரித்து, ரூ.99.90 ஆகவும், சேலம் மாநகர பகுதியில் பெட்ரோல் ரூ.100.24 ஆகவும் விற்கப்பட்டது.

நேற்றைய விலையேற்றத்தின் மூலம் தமிழகத்தில் 2 மாத காலத்திற்கு பின் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100ஐ தாண்டியுள்ளது. அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி எனபெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. மிக அதிகபட்சமாக நீலகிரியில் பெட்ரோல் ரூ.101.51க்கும், கிருஷ்ணகிரியில் ரூ.101.32க்கும், கடலூரில் ரூ.101.26க்கும் விற்கப்பட்டது. சென்னை, கரூரில் மட்டும் ரூ.100க்கு கீழ், அதாவது ரூ.99.50 என்ற நிலையில் விற்கப்படுகிறது. இதுபோல், பெட்ரோல் மும்பையில் ரூ.107.95, டெல்லியில் ரூ.101.89, பெங்களூருவில் ரூ.105.44க்கு விற்கப்பட்டது.

இதேபோல் டீசல் விலை, நேற்றைய தினம் 29 காசு அதிகரித்ததன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.74க்கு விற்கப்பட்டது. சேலத்தில் ரூ.95.08க்கு விற்பனையானது. கடந்த 8 நாளில் டீசல் விலை மட்டும் ரூ.1.48 அதிகரித்துள்ளது. இதனால், பல நகரங்களில் டீசல் ரூ.95ஐ தாண்டியுள்ளது. டெல்லியில் ரூ.90.17, மும்பையில் ரூ.97.84, பெங்களூருவில் ரூ.95.70க்கு விற்பனையானது. காஸ் சிலிண்டர் விலை: கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.694 ஆகவும், சென்னையில் ரூ.710 ஆகவும் இருந்தது. பின்னர், பிப்ரவரி மாதத்தில் 3 முறையாக ரூ.100ம், மார்ச் மாதம் ஒரு முறை ரூ.25ம் உயர்த்தப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் சிலிண்டர் விலையில் ரூ.10 குறைத்தனர். பிறகு மே, ஜூன் மாதத்தில் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நிலையாக வைத்துக் கொண்டனர். பிறகு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என அடுத்தடுத்து 3 மாதமும் தலா ரூ.25 வீதம் அதிகரித்தனர். இதனால், சென்னையில் கடந்த மாதம் (செப்டம்பர்) காஸ் சிலிண்டர் விலை ரூ.900.50 ஆக அதிகரித்தது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (அக்டோபர்) காஸ் சிலிண்டர் விலையை நேற்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

கடந்த மாத விலையிலேயே தொடருவதாக அறிவித்துள்ளது. இதனால், டெல்லி, மும்பையில் ரூ.884.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.911 ஆகவும், சென்னையில் ரூ.900.50 ஆகவும் விற்கப்படுகிறது. சேலத்தில் ரூ.918.50ல் நீடிக்கிறது.  அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் ரூ.1,831க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதம் ரூ.36.50 அதிகரித்து, ரூ.1,867.50 ஆக உயர்ந்துள்ளது. சேலத்தில் வர்த்தக சிலிண்டர் கடந்த மாதம் ரூ.1,788.50ல் இருந்து ரூ.36.50 உயர்ந்து, ரூ.1,825 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.36 முதல் ரூ.40 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 பெட்ரோல், டீசல், வர்த்தக காஸ் சிலிண்டர் என மூன்றின் விலையும் நேற்று ஒரேநாளில் அதிகரிக்கப்பட்டதால், மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெட்ரோல் விலையை ஏற்றி மீண்டும் ரூ.100க்கும் மேல் கொண்டு வந்து விட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், டீசல் விலையும் தொடர்ந்து ஏற்றம் பெற்று வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதிப்பை கண்டுகொள்ளாமல் ஒன்றிய அரசு இருப்பது வேதனை அளிப்பதாகவும், விலையேற்றத்திற்கு கடும் கண்டனத்தையும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.  இந்த விலையேற்றம் பற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ”சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 80 டாலரை தாண்டியதால், மீண்டும் பெட்ரோல், டீசல், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் நாட்களிலும் நீடிக்க வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, பெட்ரோல், டீசல், காஸ் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
* பெட்ரோலிய பொருட்கள் மூலம் ஒன்றிய அரசுக்கு கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.3,34,315 கோடியும், 2020-21ல் ரூ.4,53,812 கோடியும் வரி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2014-15 நிதியாண்டில் இந்த வருவாய் ரூ.1,72,065 கோடியாக இருந்தது.

* தமிழக அரசின் நடவடிக்கையால் பெட்ரோல் விலை ரூ.100க்குள் குறைந்த போதும், ஒன்றிய அரசின் நடவடிக்கையால் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரித்து விட்டது.
* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி விலை உயர்த்தப்படுகிறது. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலன் மக்களுக்கு கிடைக்காத  அளவுக்கு கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,United States government , Tamil Nadu, Petrol Price, Diesel, Commercial Gas, Government of India,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...