அரியானாவில் தீவிரமாகிறது விவசாயிகள் போராட்டம்: தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றதால் பரபரப்பு..!

சண்டிகர்: அரியானா மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதலாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா மாநிலத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கர்னால் மாவட்டத்தில் பாஜக தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இது அம்மாநில விவசாயிகளுக்கிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பாரதிய ஜனதா தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை மண்டையை உடைக்குமாறு காவலர்களுக்கு கர்னால் மாவட்ட துணை கோட்டாட்சியர் உத்தரவிட்டது தொடர்பாக காணொலி வெளியாகி பரபரப்பை அதிகரித்தது. இதனிடையே ஜாஜ்ஜர் மாவட்டத்தில் உள்ள நேரு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியானா துணை முதலமைச்சரும் ஜனநாயக மக்கள் கட்சி தலைவருமான துஷ்யந்த் சவுதலா பங்கேற்றார்.

இதையறிந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பு கொடிகளை எந்தி குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து விவசாயிகளை கலைத்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் காவல்துறையின் தடுப்புக்களை தாண்டி கல்லூரிக்குள் நுழைய முற்ப்பட்டதால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சி செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பெறும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேசிய காவல்துறையினர் 15 பேர் மட்டும் போராட்டம் நடத்த அனுமதிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து பெண்கள் உள்பட 15 பேர் நேரு கல்லூரி அருகே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: