நீலகிரி அருகே மேலும் ஒருவரை அடித்துக் கொன்றது ஆட்கொல்லி புலி: ஏற்கனவே 3 பேர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில் 4-வதாக ஒருவர் இறந்துள்ளதால் மக்கள் அச்சம்..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆதிவாசி மாதன் (52) என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். T23 என பெயரிடப்பட்டுள்ள அந்த புலி, 3 மனிதர்களையும், 30க்கும் அதிகமான கால்நடைகளையும் கொன்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அச்சுறுத்தி வரும் புலியை சென்னை அருகேயுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து, கடந்த 25-ம் தேதி முதல் அதனை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணிகள் 7ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புலியின் இருப்பிடத்தை கண்டறியும் பணிகளில் வனத்துறையினருடன், வனத்துறை அதிவிரைவு குழு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 150க்கும் மேற்பட்டோர் காலை முதல் தொடர்ந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் கேரளாவிலுள்ள குழுவினரும், அனுபவமிக்க வீரர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். புலிக்கு மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கு வனப்பகுதிகளில் செல்வதற்கு வசதியாக முதுமலையில் இருந்து சீனிவாசன் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது.

முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்களோடு இருக்கும் புலி, சோர்வாக தேவன் எஸ்டேட்டில் இருந்து மசினக்குடிக்கு செல்லத் தொடங்கியுள்ளது. அங்கு எப்படியேனும் புலியை உயிருடன் பிடித்து விட வேண்டும் என வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மசினகுடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆதிவாசி மாதன் (52) என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். ஏற்கனவே கூடலூரில் 3 பேர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில் 4வதாக ஒருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>