சாயக்கழிவு, நகராட்சி கழிவு நீர் கலப்பது குறித்து அமராவதி ஆற்றுப்பகுதியில் தேசிய பசுமை தீர்ப்பாயக்குழு 3வது முறை ஆய்வு

கரூர் : கரூர் அமராவதி ஆற்றுப்பகுதியில் சாயக்கழிவு மற்றும் நகராட்சி கழிவு நீர் கலப்பது குறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயக்குழுவினர் 3வது முறையாக நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.கரூர் அமராவதி ஆறு மற்றும் வாய்க்கால்களில் சாயக்கழிவு மற்றும் நகராட்சி கழிவுநீர் கலந்தது தொடர்பாக வெளியான செய்திகளை தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை இந்த பிரச்னையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனைத்துதுறையினர் அடங்கிய குழுவை அமைத்து, அமராவதி ஆறு, வாய்க்கால்களில் கழிவு நீர் கலப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 11 மற்றும் 12ம்தேதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாயப்பட்டறைகளில் மட்டும் தனியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், நகராட்சி கழிவுநீர், திடக்கழிவுகள் அமராவதி ஆற்றில் கலப்பது குறித்து மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவை மறு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, ஜூலை மாதத்தில் மறு ஆய்வு நடைபெற்றது.

இந்நிலையில், தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் 3வது முறையாக கரூர் அமராவதி ஆற்றில் நேற்று ஆய்வு மேற்கொண்டது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானிகள் மகிமா, கார்த்திக்கேயன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், அமராவதி ஆறு நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் முருகேசன், நகராட்சி பொறியாளர் நக்கீரன் அடங்கிய குழுவினர் அமராவதி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

செட்டிபாளையம் அமராவதி தடுப்பணை தொடங்கி நகரில் அமராவதி ஆறு செல்லும் பகுதிகளில் இருந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 6 இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆய்வுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>