வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் தோனி பாராட்டு

சார்ஜா: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 44வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விருத்திமான் சகா 44 (46 பந்து), அபிஷேக் சர்மா, அப்துல் சமத் தலா 18 ரன் எடுத்தனர். ஜேசன் ராய் 2, வில்லியம்சன் 11, ப்ரியம் கார்க் 7, ஹோல்டர் 5 ரன்னில் ஆட்டம் இழந்தனர். ரஷித்கான் நாட்அவுட்டாக 17 ரன் அடித்தார். சென்னை பந்துவீச்சில், ஜோஷ் ஹேசில்வுட் 3, பிராவோ 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 45 (38பந்து), மொயின் அலி 17, டூபிளசிஸ் 41(36 பந்து), ரெய்னா 2 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்த சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நீண்ட நாட்களுக்கு பின் டோனி சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். அம்பாதி ராயுடு 17, டோனி 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர். ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியதாவது: கடந்த தொடரில் மோசமான செயல்பாட்டால் நாங்கள் வலுவாக திரும்ப வேண்டும் என்று சொன்னோம். தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். கடந்த முறை நிறைய பேர் தங்கள் பாணியில் ஆடவில்லை, இந்த ஆண்டு நாங்கள் அதைச் செய்துள்ளோம். வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். விளையாட்டின் அனைத்து துறைகளையும் சமநிலையில் வைத்திருப்பதற்கான பொறுப்புகளை அவர்கள் எடுத்துள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை, நாங்கள் அவர்களின் நம்பிக்கையை திருப்பிச் செலுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார். ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், நாங்கள் மோதுமான ரன் எடுக்கவில்லை. இருப்பினும் கடைசிவரை பவுலர்கள் போராடினர். கூடுதலாக 10-15 ரன் எடுத்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். சிஎஸ்கே நன்றாக ஆடியது, என்றார். ஆட்டநாயகன் ஹேசில்வுட் கூறுகையில், நான் மிகவும் கடினமாக உழைத்து ஒவ்வொரு ஆட்டத்திலும் நிறைய கற்றுக்கொண்டேன். இது திருப்தி அளிக்கிறது. ராயைப் பெறுவது ஒரு பெரிய விக்கெட் ஆகும். மேலும் ஆரம்பத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது நல்லது. கடந்த சில வாரங்களாக பிராவோவிடமிருந்து கற்றுக்கொண்டு வருகிறேன், என்றார்.

Related Stories:

More
>