×

கூடலூரில் 6ம் நாளாக புலியை பிடிக்கும் பணி தீவிரம் வனத்துறையினருடன் இணைந்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் தேடுதல் வேட்டை-முதுமலையில் இருந்து கும்கி அழைத்து வரப்பட்டது

கூடலூர் : கூடலூர் அருகே மனிதர்கள், மாடுகளை அடித்து கொல்லும் புலியை பிடிக்கும் பணியில் 6ம் நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினருக்கு போக்கு காட்டும் ஆட்கொல்லி புலியை பிடிக்க முதுமலையில் இருந்து கும்கி வரவழைக்கப்பட்டு தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் புலி ஒன்று தொழிலாளியை தாக்கி கொன்றது. மேலும் 20க்கும் மேற்பட்ட மாடுகளை அடித்து கொன்றுள்ளது. இப்புலியை உடனடியாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணிகள் நேற்று முன்தினம் 5ம் நாளாக தொடர்ந்தது. மேபீல்டு எஸ்டேட் பகுதியில் இருந்து மீண்டும் தேவன் எஸ்டேட் பகுதிக்கு இடம் மாறி சென்றதால் வனத்துறையினரும் அப்பகுதிக்கு விரைந்தனர்.

மதியம் ஒரு மணியளவில் புலி மேபீல்டு மற்றும் தேவன் எஸ்டேட் பகுதிக்கு இடையேயுள்ள புதர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர் அப்பகுதியில் புலியை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். புலியை பிடிக்க கூண்டு வைத்தும் அதில் சிக்கவில்லை. இந்த நிலையில் தேவன் எஸ்டேட் பகுதியில் புலி மறைந்து இருக்கும் பகுதியில் புலியை தேடும் பணியில் நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை வனத்துறையினர் ஈடுபட்டனர். இருப்பினும், புலிக்கு மயக்க ஊசி போட்டு பிடிக்கும் வகையில் புலி சிக்காததால் 6 மணியளவில் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், நேற்றும் 6ம் நாளாக புலியை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்தது.நேற்று காலை முதல் புலியின் இருப்பிடத்தை கண்டறியும் பணிகளில் வனத்துறையினருடன், வனத்துறை அதிவிரைவு குழு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், புலியின் இருப்பிடத்தை கண்டறியும் பணிகளில் ட்ரோன் கேமராவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 150க்கும் மேற்பட்டோர் காலை முதல் தொடர்ந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். புலிக்கு மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கு வனப்பகுதிகளில் செல்வதற்கு வசதியாக முதுமலையில் இருந்து சீனிவாசன் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆனால், புலி இதுவரை சிக்கவில்லை. புலியை கண்டுபிடித்து விரைவில் மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Güdallur ,Copsel Detention Division , Kudalur: The forest department has been engaged in the task of capturing the tiger that kills people and cows near Kudalur for the 6th day.
× RELATED கூடலூரில் பலத்த மழையால் மண்சரிவு: மாணவர்கள் அவதி