பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 66 பேருக்கு வாழ்நாள் தடை

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வானது நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் கலந்துகொண்டு தேர்வினை எழுதினர். இறுதியில் 2,000 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அழைக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் நடைபெற்றது. ஆனால் அப்போது மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது.

இந்த 2,000 பேரில் பலர் இந்த தேர்வுக்கு பணம் கொடுத்து முறைகேடாக வெற்றி பெற்றுள்ளனர். வெறும் 25, 40 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் கூட 185 மதிப்பெண்கள், 190 மதிப்பெண்கள் என 150 மதிப்பெண்களுக்கு மேல் பலருக்கு போலியாக மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளது. பணம் கொடுத்து அவர்கள் அதிக மதிப்பெண்ணை பெற்றுள்ளனர் என்று புகார் எழுந்தது. அப்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த ஜெகன்நாதன், இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தினார். அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலை வெளிப்படையாக ஆன்லைனில் வெளியிட்டார்.

இதனையடுத்து பல போலி தேர்வர்களின் முகத்திரை கிழிந்தது. அவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. சுமார் 199 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அவர்கள் இனி தமிழக அரசு நடத்தக்கூடிய எந்த தேர்விலும் பங்கேற்க முடியாது என்று உத்தரவிடப்பட்டது. தற்போது இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த சூழ்நிலையில் மேலும் 66 பேர் இதேபோன்று பணம் கொடுத்து மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளதால் அவர்களின் முழு முகவரி, அவர்கள் படித்த படிப்பு குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தேர்வர்கள் இனி நடைபெறக்கூடிய தேர்வுகளில் பங்கேற்க முடியாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்று அப்போது ரத்து செய்யப்பட்ட தேர்வு தொடர்ந்து நடைபெறாமல் இதுவரை நடைமுறையில் உள்ளது. ஒருபுறம் வழக்கு நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் இந்த மாத இறுதியில் தேர்வு நடத்தப்பட இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான உத்தேச தேதியையும் அறிவித்துள்ளது. எனவே தேர்வுகள் நடைபெற உள்ள சூழ்நிலையில் கூடுதலாக 66 பேர் பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>