×

நாட்றம்பள்ளி அருகே 10ம் வகுப்பு படித்து விட்டு 30 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது-அதிகாரிகளிடம் வாக்குவாதம்

நாட்றம்பள்ளி : திருப்பத்தூர் மாவட்டம், ஜல்லியூரை சேர்ந்தவர் ஜெயராமன் (55). இவர் நாட்றம்பள்ளி அடுத்த அம்மணாங்கோயில் ஊராட்சி புதுப்பேட்டை ராஜவீதியில் தன்னை ஓமியோபதி மருத்துவர் எனக்கூறி கடந்த 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறார். பெரும்பாலும் இவரது கிளினிக்கில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த ஊரக பணிகள் நல இயக்குனர் விஸ்வநாதன், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் குமரவேல், வேல்முருகன், தனிப்படை டிஎஸ்பி சரவணக்குமார் மற்றும் நாட்றம்பள்ளி போலீசார் இவரது கிளினிக்கிற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளனர்.

அவர்கள் இவரை கையும் களவுமாக பிடிக்க முயன்றனர். அதற்கு ஏற்ப அதிகாரி ஒருவர், நோயாளி போல் ஜெயராமனின் கிளினிக்கில் சென்று தனக்கு வயிற்று வலி உள்ளதாக கூறியுள்ளார்.
வந்திருப்பது அதிகாரி என அறியாத ஜெயராமன், உடனடியாக அங்கிருந்த அலோபதி சிகிச்சை முறையில் ஊசி போட அருகில் வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மருத்துவக்குழுவினர் ஜெயராமனை சுற்றி வளைத்தனர்.

விசாரணையில், அவர் 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஓமியோபதி டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அவரை நாட்றம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு வரும்படி மருத்துவக்குழுவினர் அழைத்தனர். அதற்கு ஜெயராமன், ‘எம்பிபிஎஸ் படித்த டாக்டரை வைத்து தான் இந்த கிளினிக்கை நடத்தி வருகிறேன்’ எனக்கூறியுள்ளார்.

அதற்கு மருத்துவக்குழுவினர், ‘அப்படியென்றால் 10ம் வகுப்பு வரை படித்த நீங்கள், நோயாளியிடம் பிரச்னை கேட்டு ஊசி போட வந்தது ஏன்?’ எனக்கேட்டனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து மருந்து, மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி போலீசில் அவரை ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜெயராமனை கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களின் பெயர் பலகை

நாட்றம்பள்ளி தாலுகா முழுவதும் பலர் எம்பிபிஎஸ் டாக்டர் பெயர்களை பயன்படுத்தி ஆங்கில மருத்துவம் பார்த்து வருகின்றனர். சிலர் எம்பிபிஎஸ் முடித்தவர்களை ஒரு மணி நேரம் மட்டும் கிளினிக்கில் வைத்துக்கொண்டு நாள் முழுவதும் மருத்துவம் படிக்காத நபர்கள் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களிடம் அரசு அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும்போது எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களின் பெயர் பலகையை காண்பித்து தப்பித்து விடுகின்றனர். இதுபோன்று மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Natrampalli , Natrampalli: Jayaraman (55) hails from Jalliyur, Tirupati district. He is from Natrampalli next to Ammanangoil Panchayat Puthuppettai
× RELATED நாட்றம்பள்ளியில் தேசிய...