×

திருக்கோயிலில் பணியாளர் பற்றாக்குறையை போக்குவதற்காக காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு

சென்னை : திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருக்குளம் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள படித்துரை  தூய்மைப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்களில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் தெரிவித்தாவது, திருக்கோயில் திருப்பணி தொடங்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். திருக்குளம் சுற்றி 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள படித்துரை தூய்மைப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். குளத்திற்கு வரும் நீரை தூய்மையாக பராமரிக்க வேண்டும். திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். திருக்கோயிலில் பணியாளர் பற்றாக்குறையை போக்குவதற்காக காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
    
தேர் கொட்டகை விரைவில் தூய்மைப்படுத்தப்படும். அன்னதான கூடம் சுத்தமாக வைத்திருக்கவும், பரிமாறப்படும் உணவு தரமானதாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சுற்றுபிராகாரம் மற்றும் திருக்கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திருக்கோயில் வளாகம் 22 அலுவலர்களை கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறதுஎன்றார்.
    
இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,Sekarbabu , இந்து சமய அறநிலையத்துறை, அமைச்சர் ,சேகர்பாபு
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...