×

லண்டனை உலுக்கிய இளம்பெண் சாராவின் கொலை வழக்கு: காவல் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

லண்டன்: தெற்கு லண்டனில் பிரிஸ்டன் பகுதியை சேர்ந்தவர் சாரா. 33 வயதான மார்க்கெட்டிங் நிர்வாகியான இவர் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி மாலை தனது குடியிருப்பில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள நண்பர் ஒருவரை சந்திக்க சென்றுள்ளார். அன்று இரவு 9 மணியளவில் நண்பரை சந்தித்துவிட்டு புறப்பட்ட அவர் செல்போனில் பேசியவாறே வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். சற்று நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் சாராவிற்கு என்னவாயிற்றோ என தேடிவிட்டு கடைசியில் போலீசில் புகார் அளித்தார்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து செயல்பட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர். அதேநேரத்தில் சாரா மாயமானது குறித்து சமூக வலைத்தளங்களில் நண்பர் பதிவிட்டதால் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனிடையே ஒரு வாரம் கடந்த நிலையில் 80 கி.மீ தொலைவில் உள்ள கென்ட் நகருக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள குளத்தில் இருந்து சாராவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சாரா மாயமான இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 48 வயதான வேன் கூசன்ஸ் என்ற போலீஸ் அதிகாரிக்கு இதில் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.

சாரா தொடர்பாக கூசன்ஸிடம் விசாரணை நடத்திய போது முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மருத்துவந்த கூசன்ஸ் சிசிடிவி பதிவுகளை காட்டி விசாரணை நடத்தியபோது இளம்பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடத்தல், பலாத்காரம், கொலை ஆகிய மூன்று குற்றங்களில் ஈடுபட்டதற்காக கூசன்ஸுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்து தீப்பளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் கொலை நடந்தது எப்படி என விவரித்தார். சாரா தனது வீட்டிற்கு நடந்து வந்த போது பூங்கா அருகே வழிமறித்த கூசன்ஸ் போலீஸ் அடையாள அட்டையை காட்டி மிரட்டியுள்ளார். கொரோனா விதிமுறைகளை சாரா மீறி இருப்பதாகவும் அதனால் கைது செய்வதாகவும் கூறியுள்ளார்.

அவரை கைவிலங்கிட்டு காரில் கடத்திய கூசன்ஸ் ஆள் நடமாட்டம் இல்லாத தனக்கு சொந்தமான பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு தன்னிடம் இருந்த போலீஸ் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சாராவின் சடலத்தை எரித்த பிறகு பண்ணை வீட்டின் அருகே இருந்த குளத்தில் வீசிவிட்டு எதுவும் நடக்காதவாறு திரும்பியுள்ளார். இருப்பினும் மிக திறமையான ஸ்காட்லாந்து யார்டின் போலீசின் கண்களுக்கு கூசன்ஸின் குற்றச்செயல் தப்பவில்லை. அவர் சென்ற இடங்கள் அனைத்திலும் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் தண்டனையை பெற்று தந்துள்ளனர்.

5 மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் சாராவிற்கு நேர்ந்த கொடுமை தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இதுபோன்ற குற்றச்செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு போலீசார் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இங்கிலாந்தில் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாராவின் இறுதிச்சங்கில் திரண்ட பெண்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினர். சாரா வழக்கில் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் குறித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். இருந்தபோதும் லண்டனில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : London ,Sarah , London, murder, case
× RELATED லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த...