பறக்கும்படை சோதனையில் ரூ.33.9 லட்சம், பரிசு பொருட்கள் பறிமுதல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. மேலும் தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 418 பதவிகளுக்கு தற்செயல் தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் பறக்கும் படையினர் ரூ.33.90 லட்சம் ரொக்கம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை.

ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் கடந்த 18 முதல் 28ம் தேதி வரை பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டது.  இதில் பறக்கும் படையினரால் ரூ.33,90,50 ரொக்கமும், 16.40 கிலோ சந்தன கட்டைகள், 100 மின்விசிறிகள், 215 புடவைகள், 1065 துண்டுகள், 250 பித்தளை விளக்குகள், 600 குங்கும சிமிழ்கள் ஆகிய பரிசு பொருட்கள், 1009 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தற்செயல் தேர்தல் நடைபெறும் கோயமுத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினரால் ரூ.7,99,800 கைப்பற்றப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>