×

காஞ்சிபுரம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடை அகற்றுவதற்கு எதிர்ப்பு: குடிமகன்கள் திடீர் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கையில் மது பாட்டிலுடன் குடிமகன்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரிய காஞ்சிபுரம் வெள்ளை குளம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடை, குடியிருப்பு பகுதியின் நடுவே பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினர். இதைதொடர்ந்து, இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அகற்றுவது குறித்து, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், டாஸ்மாக் கடை குடியிருப்புக்கு மத்தியில் இல்லை என தவறான தகவலை, டாஸ்மாக் நிர்வாகம் பதிலாக அளித்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள், கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை ஆய்வு செய்த கலெக்டர் ஆர்த்தி, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக மண்டல மேலாளருக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடை இடம் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையறிந்த குடிமகன்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை டாஸ்மாாக் கடை முன்திரண்டனர். அங்கு, மதுபாட்டில்களுடன், கடையை வேறு இடத்துக்கு மாற்ற கூடாது என கூறி, கடை நுழைவாயில் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சிவகாஞ்சி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட குடிமகன்களை கலைந்து செல்ல வேண்டும். இதுபோல் போராட்டத்தில் ஈடுபட கூடாது என எச்சரித்து அனுப்பினர். டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராடி வரும் நிலையில், மதுக்கடையை மாற்ற கூடாது என குடிமகன்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Tasmag store ,Kanchipuram , Kanchipuram, agitation, Tasmag, citizens, struggle
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...