தினமும் ரூ.1002 கோடி சம்பாதித்த அதானி: ஒரே ஆண்டில் 261 சதவீத வளர்ச்சி; சொத்து மதிப்பு ரூ.5.5 லட்சம் கோடி

புதுடெல்லி: இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலிலும் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ள அதானி குழுமம், கடந்தாண்டில் ஒவ்வொரு நாளும் ரூ.1002 கோடி சம்பாதித்து பிரமாண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது. பாஜ.வுக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபராக கவுதம் அதானி கருதப்படுகிறார். ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இவருடைய அதானி நிறுவனத்தின் வளர்ச்சி, அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல், சொத்து மதிப்பிலும், தினசரி வருமானத்திலும் கொடி கட்டி பறக்கிறது. இந்நிலையில், 2020-2021ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்களின் பட்டியலை  ‘இந்தியா இன்போலைன் பிரன்ட் லைன்’ (ஐஐஎப்எல்) நிறுவனத்தின் ‘ஹுரான் இந்தியா’ வெளியிட்டுள்ளது.  இது பற்றி இந்த நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் அனாஸ் ரகுமான் ஜுனாத் கூறியதாவது:

 இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் மிக வேகமான வளர்ச்சியை பெற்றவர்களில் அதானி நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி (59) இடம் பெற்றுள்ளார். இவரும், இவருடைய குடும்பத்தினரும் சார்ந்த தொழில் நிறுவனங்களின் சொத்து மதிப்பு,  2020- 2021ம் ஆண்டில்   5.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டில் இவர்களின் நிறுவனம் ஒவ்வொரு நாளும் ரூ.1002 கோடி சம்பாதித்துள்ளது. இதன்மூலம், நாட்டின் 2வது பெரிய பணக்கார குடும்பம்  என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். இந்த சொத்து வளர்ச்சியின் மூலம், சீனாவை சேர்ந்த பாட்டில் தண்ணீர் தயாரிப்பாளர் சாங் ஷன்ஷனை பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் 2வது பணக்காரர் என்ற பெருமையையும் அதானி பெற்றுள்ளார்.

கடந்தாண்டு இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அதானி, 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்துக்கு வந்துள்ளார். துபாயில் தொழில் செய்து வரும் இவருடைய சகோதரர்  வினோத் சாந்திலால் அதானி, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 12 இடங்கள் முன்னேறி, தற்போது 8வது இடத்துக்கு வந்துள்ளார். இவருடைய குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் முதல் பணக்காரரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து ஒரு நாளைக்கு 163 கோடி உயர்ந்துள்ளது. தற்போது, இவர்களின் குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.7 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உள்ளது.

எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் சிவநாடாரின் குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்தாண்டில் 67 சதவீதம் உயர்ந்து, ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 600 கோடியாகி இருக்கிறது. கடந்தாண்டில் இவரின் குடும்பம் தினமும் 260 கோடி ஈட்டியுள்ளது. இதேபோல், புனேயை சேர்ந்த சைரஸ் பூனாவாலா, ராதாகிஷண் தமானி குடும்பம்,  குமார் மங்கலம் பிர்லா, ஆதித்யா பிர்லா குடும்பம் ஆகியவை, நாட்டின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.1000 கோடி வைத்திருப்போர் எண்ணிக்கை 1007 ஆக உயர்வு

* இந்தியாவில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்த பணக்காரர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன் 100 ஆக இருந்தது.

*  கடந்த 2020ம் ஆண்டில் இந்த பணக்காரர்களின் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது.

*  இதே வேகத்தில்  சென்றால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.  

* இவர்கள் அனைவருடைய சொத்து மதிப்பும்  கடந்தாண்டில் மட்டுமே 51 சதவீதம் அதிகரித்துள்ளது.

* பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களும், உலகளவிலான  பொருளாதார மாற்றங்களும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளது.

லட்சம் கோடி பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 58 பேர்

* கடந்தாண்டில் லட்சம் கோடிக்கு மேல் சொத்துகள் வைத்திருக்கும்  இந்திய பணக்காரர்களின் வரிசையில் புதிதாக 58 பேர் சேர்ந்துள்ளனர். இதன் மூலம், லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள  இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை  258 ஆக உயர்ந்துள்ளது.   

23 வயதில் லட்சம் கோடி

* லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலில் வயதில் மிகவும் குறைந்தவர் சஸ்வாத் நக்ராணி. 23 வயது மட்டுமே நிரம்பிய இவர், பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் ‘பாரத்பே’ ஆப்பின் துணை நிறுவனர் ஆவார்.

2020ம் ஆண்டில் இந்தியாவின் பணக்காரர்கள் தினமும் சம்பாதித்த தொகை, அவர்களின் தரவரிசை, மொத்த சொத்து மதிப்பு, கடந்தாண்டு ஏற்பட்ட சொத்து வளர்ச்சியின் சதவீதம்  விவரங்களின் பட்டியல் வருமாறு:

தரவரிசை        பெயர்            மொத்த சொத்து மதிப்பு     கடந்தாண்டு     கம்பெனி பெயர்        2020ல் தினமும் சம்பாதித்த தொகை

                    (லட்சம் கோடியில்)        வளர்ச்சி

1    முகேஷ் அம்பானி, குடும்பம்        7,18,000         9%        ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்        163 கோடி

2    கவுதம் அதானி,  குடும்பம்        5,05,600        261%        அதானி                1002 கோடி

3    சிவநாடார், குடும்பம்            2,36,600        67%        எச்சிஎல்                260 கோடி

4    இந்துஜா, குடும்பம்            2,20,000        53%        இந்துஜா                209 கோடி

5    எல்என் மிட்டல், குடும்பம்        1,74,400        187%        ஆர்செலர்மிட்டல்            312 கோடி

6    சைரஸ் பூனாவாலா, குடும்பம்        1,63,700        74%        சீரம் நிறுவனம்            190 கோடி

7    ராதாகிஷண் தமானி, குடும்பம்        1,54,300        77%        அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்        184 கோடி

8    வினோத் சாந்திலால் அதானி,         1,31,600        212%        அதானி                245 கோடி

    குடும்பம்

9    குமார் மங்கலம், குடும்பம்        1,22,200        230%        ஆதித்யா பிர்லா            242 கோடி

10    ஜெய் சவுத்ரி            1,21,600        85%        செஸ்காலர்            153 கோடி

Related Stories:

More
>