×

விமானப்படை அதிகாரி மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய பெண் அதிகாரிக்கு இருவிரல் மருத்துவ பரிசோதனை: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்

கோவை: விமானப்படை பெண் அதிகாரிக்கு இருவிரல் மருத்துவ பரிசோதனை செய்ததற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து விமான படை தலைமை தளபதிக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. கோவை ரெட்பீல்டில் விமானப்படை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் டெல்லியை சேர்ந்த 28 வயதான பெண் அதிகாரி மற்றும் சில அதிகாரிகள் பயிற்சி பெற்று வந்தனர். அந்த பெண் அதிகாரியை அங்கு பயிற்சிக்காக வந்திருந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அமித்தேஸ் (30) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பெண்  கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்து புகார் அளித்தார். இதையடுத்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து அமித்தேஸை கைது செய்து உடுமலை கிளை சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 9ம் தேதி கூடைப்பந்து பயிற்சியின்போது காயம் ஏற்பட்டது. அதற்கு வலி நிவாரணி மருந்து எடுத்து கொண்டுவிட்டு பயிற்சி கல்லூரியில் உள்ள பாருக்கு சென்றேன். அங்கு அமித்தேஸ் இருந்தார். நான் என் தோழிகளுடன் சேர்ந்து அங்கு மது வாங்கி குடித்தேன். வாந்தி, மயக்கம் வந்ததால், தோழிகள் உதவியுடன் எனது அறைக்கு சென்றேன். பின்னர், எனது அறைக்கு வந்த அமித்தேஸ் நான் மயக்க நிலையில் இருந்ததை பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக எனது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்கள் பாலியல் பலாத்காரம் நடந்து உள்ளதா என கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய கூறினர்.

பின்னர், பயிற்சி கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு டாக்டர்கள் எனக்கு இருவிரல் பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது என்பது எனக்கு தெரியாது. ஆனால், அதனையும் மீறி அவர்கள் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க வேண்டாம் எனவும், இருவரின் சம்மதத்துடன் சம்பவம் நடந்ததாக கூற வேண்டும் எனவும் எனக்கு நெருக்கடி அளித்தனர். என்னிடம் இருந்த ஆதாரங்களை வாங்க முயற்சி செய்தனர். கடந்த 10ம் தேதி நடந்த சம்பவத்திற்கு 20ம் தேதி வரை கல்லூரி சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் போலீசில் புகார் அளித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது எப்ஐஆரிலும் உள்ளது.

விமானப்படை பெண் அதிகாரிக்கு இருவிரல் பரிசோதனை செய்ததை கண்டித்து இந்திய விமானப்படை தலைமை தளபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘‘பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உண்மைதானா? என்பதை கண்டறிய இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. தடை செய்யப்பட்ட பரிசோதனை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது. இருவிரல், சோதனை அறிவியலுக்கு புறம்பானது என இந்திய மருத்துவ ஆய்வு கழகம் 2014ல் தடை செய்துள்ளது. இந்திய விமானப்படையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானப்படைக்கு வழக்கு மாற்றம்
பெண் அதிகாரி பலாத்காரம் தொடர்பாக கைதான சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அமித்தேஸ் (30)  ஜாமீன் கோரி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் நேற்று கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, முப்படைகளில் ஒன்றான விமான படை அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு அதிகாரமில்லை என அமித்தேஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். வழக்கை விமான படைக்கு மாற்ற  வேண்டும் என கோரினார். இதையடுத்து, பொறுப்பு நீதிபதி திலகேஸ்வரி, விசாரணையை இந்திய விமானப் படை விசாரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, அமித்தேஸை விமானப்படை அதிகாரிகளிடம் மாநகர போலீசார் ஒப்படைத்தனர். அவரை ராணுவ வீரர்கள் அழைத்து சென்றனர். விமானப்படை அதிகாரி அமிதேஸ் தரப்பு வழக்கறிஞர் சுந்தரவடிவேலு கூறுகையில், இந்திய விமானப்படை அதிகாரிகள் விசாரணையில், குற்றம் நிருபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படும். பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கலாம். ஆனால், கைது செய்து சிறையில் அடைத்து இருக்கக்கூடாது என்றார்.

Tags : Air ,National Commission for Women , Air Force officer, rape complaint, Female Officer, Two-Finger Medical Examination, National Commission for Women
× RELATED மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சை...