குழந்தையை தவிக்கவிட்டு மாயமானவர் திருநம்பியாக மாறி தோழியுடன் சென்றார் மதுரை இளம்பெண்

மதுரை: மதுரை மாவட்டம், பேச்சிகுளத்தை சேர்ந்த செல்வராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகள் ஜெய்ஸ்ரீக்கு (24). சரவணன் என்பவருடன் திருமணமாகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. எனது மகளின் உடல்நிலை அடிக்கடி பாதித்தது. கடந்த ஆக. 1ம் தேதி என் மகளை வீட்டில் சென்று பார்த்தேன். அப்போது அவர் மனதளவில் ஏதோ பாதித்தது போல் இருந்தார். ஆக. 2ல் மகளும், பேரனும் என் வீட்டிற்கு வந்தனர். ஆக. 5ல் மகளும், அவளது தோழி துர்காவும் மதுரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு செய்வதற்காக சென்றனர். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு பகுதிகளில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. மகளின் தோழியும் மாயமானார். எனவே, எனது மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வீ.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார், மாயமான ஜெய்ஸ்ரீயை நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தினர். அந்தப் பெண் நீதிபதிகளிடம், ‘‘நான் திருநம்பியாக மாறி விட்டேன். பள்ளி ேதாழியான துர்காவுடன் விரும்பி சென்னையில் சென்று வசிக்கிறேன். எனது தாயுடன் செல்ல விருப்பம் இல்லை. தோழியுடன் செல்ல விரும்புகிறேன்’’ என்றார். மனுதாரர் வக்கீல் பூர்ணசந்திரன் ஆஜராகி, ‘‘அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. வயது முதிர்ந்த மனுதாரரால், சிறு குழந்தையை பராமரிப்பது சிரமம். எனவே குழந்தையின் நலன் கருதி குழந்தையோடு சேர்ந்து வாழ அறிவுறுத்த வேண்டும்’’ என்றார். ‘‘அந்த பெண் மேஜர் என்பதால், அவரை கட்டாயப்படுத்த முடியாது. அவர், விரும்பியபடி செல்லலாம்’’ எனக் கூறிய நீதிபதிகள், மனு மீதான விசாரணையை அக். 20க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories:

More
>