மருத்துவ படிப்பில் ஓபிசி ஒதுக்கீடு வழக்கில் அட்டர்னி ஜெனரலை நியமிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு திமுக கடிதம்

சென்னை: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மன்டவியா மற்றும் சட்டத்துறை அமைச்சர் கிரன் ராஜ்ஜூ ஆகியோருக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசுகள் வழங்கும் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரினருக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்காக ஒன்றிய அரசு 4 பேர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்றும் 3 மாதங்களில் குழு ஆய்வு செய்து 2021 கல்வியாண்டில் இருந்து இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் 2020ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஒன்றிய அரசு அமல்படுத்தவில்லை. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ஒன்றிய அரசு கடந்த ஜூலை 29ம் தேதி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 27 சதவீதம் ஒதுக்கி அறிவிப்பாணை வெளியிட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் 4000 இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது. மாநில அரசுகள் வழங்கும் இடங்களை அந்தந்த மாநிலத்திலுள்ள மாணவர்களுக்கு வழங்குவதில் உரிய ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். பல்வேறு சட்டப் போராட்டத்தை நடத்தி பாடுபட்டு இந்த ஒதுக்கீட்டை திமுக வாங்கி கொடுத்துள்ளது. இதை நீர்த்துப்போக செய்துவிடக்கூடாது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையின்போது ஒன்றிய அரசின் கொள்கை முடிவை ஆதரித்து வாதிடுவதற்காக அட்டர்னி ஜெனரலை நியமனம் செய்து நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனை காக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories: