காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கருத்து கூறும் கபில்சிபல் போன்றோரை காங்கிரஸ் புறக்கணிக்கும் நிலை ஏற்படும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கருத்து கூறும், கபில்சிபல் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரசின் தலைவராக இருந்த ராகுல்காந்தி, 2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகிய சூழலில் தான் சோனியா காந்தி மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த பொறுப்பை கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில், அவரை தற்காலிக தலைவர் என்று அழைப்பதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சோனியா காந்தியின் கடும் உழைப்பினால் அமைந்த மத்திய அரசில் பதவி சுகம் அனுபவித்த போது கபில்சிபல் போன்றவர்கள் தலைமைக்கு எதிராக என்றைக்காவது கருத்து கூறியது உண்டா? பதவியில் இருந்தபோது கருத்து கூறாதவர்கள், இப்போது கருத்து கூறுவது அப்பட்டமான சந்தர்ப்பவாத செயலாகும். இந்நிலையில், பாஜவை தேசிய அரசியலில் வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்ப்பதற்கு பதிலாக, காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பவர்கள் பாஜவுக்கு சாதகமாக செயல்படுவதாகத் தான் காங்கிரஸ் கட்சியினர் கருதுகிறார்கள். அந்த வகையில் தலைமைக்கு எதிராக கருத்து கூறும் கபில்சிபல் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

Related Stories:

More