கோவை பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை விவகாரம்: இந்திய விமானப்படை விசாரிக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

கோவை: கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை  இந்திய விமானப்படையே  விசாரிக்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி  உத்திரவிட்டார். இதனைதொடர்ந்து விமான படை பிளைட் லெப்டினன்ட் அமிதேஷ், இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். கோவை சுங்கம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படையில்  கல்லூரியில் பயிற்சிக்கு வந்த 29 வயதான பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த பெண் விமான படை அதிகாரி , உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகின்றது.

இந்திய விமான படை இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என உணர்ந்த பெண் விமான படை அதிகாரி,  இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை போலீசார் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், விமான படையில் பணிபுரியும் பிளைட் லெப்டினன்ட் அமிதேஷ் மீது  பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்து அவரை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். இந்நிலையில் விமானப் படை அதிகாரியான தன்னை கோவை காவல்துறை கைது செய்ய முடியாது எனவும் இந்திய விமான படை சட்டத்தின் கீழ் மட்டுமே தன் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என அமிதேஷ் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதனைதொடர்ந்து இந்த விவாகரம் தொடர்பாக திங்கட்கிழமை கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி திலகேஸ்வரி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி இந்திய விமானப்படையின் விசாரணையில் தனக்கு நம்பிக்கையில்லை எனவும் , கோவை மாநகர  போலீசார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்திய விமானப் படை சார்பில் கோவை மகளிர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற விமான படை அதிகாரிகள், இந்திய விமானப்படை சட்டத்தின் கீழ் மட்டுமே விமானப்படை நீதிமன்றத்தில் இது குறித்து விசாரிக்க முடியும் என வாதிட்டனர்.

இதனையடுத்து பெண் விமான படை அதிகாரி பாலியல் வன்புணர்வு வழக்கினை யார் விசாரிப்பது என்பது குறித்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என கூடுதல் மகளிர் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி பிளைட் லெப்டினன்ட் அமிதேஷ் இன்று பிற்பகல் கூடுதல் மகளிர்  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார். கோவை இந்திய விமான படை கல்லூரி அதிகாரிகளும் நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6.40 மணிக்கே விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான உத்திரவினை வாசித்த கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி திலேகஷ்வரி, இந்திய விமான படை சட்டத்தின் படி  பாலியல் வன்புணர்வு வழக்கை இந்திய விமான படையே விசாரிக்க வேண்டும் என உத்திரவிட்டார். விமான படை அதிகாரி தொடர்பான இந்த வழக்கை கோவை காவல்துறையினர் விசாரிக்க அதிகாரம் இல்லை எனவும் உத்திரவிட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட விமான படை அதிகாரி பிளைட் லெப்டினன்ட் அமிதேஷ் , இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து விமான படை அதிகாரி அமிதேஷை ராணுவ வாகனத்தில் இந்திய விமானப்படை வளாகத்திற்கு  விமானப்படை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

Related Stories:

More