×

டெல்லியில் நடைபெற்ற 2022-23ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த கூட்டம்: அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

டெல்லி: 2022-23ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த காணொலி கலந்தாய்வுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் திரு.கிரிராஜ்சிங் அவர்களின் தலைமையில் 2022-23ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்தல் குறித்த  ஆய்வுக்கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை துணை அமைச்சர்கள், செயலர்கள், பிற மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் இக்காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசும்போது, தமிழ்நாட்டில் கிராமப்புற வளர்ச்சிக்காகவும், ஊராட்சிகளின் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அயராது பணியாற்றி வருகின்றார். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ஊரகப்பகுதிகள் முழுமையான மற்றும் சமச்சீரான வளர்ச்சி பெறுவதற்கு உரிய உதவிகளை வழங்கி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேலும் சிறப்புடன் செயல்பட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டி வருகின்றார்.

அவரது ஒப்பற்ற, சீரிய தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித் துறை பணிகள் விரைவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். மேலும், 2022-23ம் நிதியாண்டிற்கான கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம் தயார் செய்வதற்காக, இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் டிசம்பர் 31 வரை தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் துவக்கப்படும் என தெரிவித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், ஊராட்சியிலுள்ள வள ஆதாரங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார். இக்காணொலி வாயிலாக பெறப்படும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் மக்கள் திட்டமிடல் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபையிலும் விவாதிக்கப்பட்டு முழுமையான கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம் தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தன் உரையின்போது தெரிவித்தார்.

மக்கள் திட்டமிடல் இயக்கம் கிராம ஊராட்சிகளில் உள்ள வள ஆதாரங்கள், தேவைகள், எடுக்கப்படஉள்ள பணிகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பிற துறை ஒருங்கிணைப்பு போன்றவற்றை விவாதித்து ஆய்வு செய்து கண்டறிந்து ஒரு முழுமையான திட்டம் தயார் செய்ய உதவிகரமாக இருக்கும். கிராம ஊராட்சிக்கு மட்டுமல்லாது வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிக்கும் ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் தயார் செய்யப்படும். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இக்காணொலி வாயிலான கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் திரு.பிரவீன் பி. நாயர், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Delhi ,Minister ,Periyakaruppan , Meeting on Rural Panchayat Development Plan for 2022-23 held in Delhi: Participation of Minister Periyakaruppan
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...