கோவையில் பலாத்காரத்திற்கு ஆளான விமானப்படை பெண் அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட பரிசோதனை முறையா ?: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்!!

கோவை: கோவை ரெட்பீல்டில் விமான படை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் டெல்லியை சேர்ந்த 28 வயதான பெண் அதிகாரி மற்றும் சில அதிகாரிகள் கடந்த சில நாட்களாக பயிற்சி பெற்று வந்தனர். காலில் காயம் ஏற்பட்டதால் ஓய்வு எடுத்த பெண் அதிகாரியை பயிற்சிக்காக வந்திருந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அமித்தேஸ் (30) என்பவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்து புகார் அளித்தார்.இது தொடர்பாக கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அமித்தேைஸ கைது செய்து உடுமலை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தனக்கு விமானப்படை அலுவலகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்து உள்ளார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட எப்ஐஆரிலும் அந்த பெண் பட்ட கஷ்டங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.அதில், பலாத்கார புகாரை திரும்பப் பெற இந்திய விமானப் படை அதிகாரிகளால் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், பாலியல் பலாத்காரம் நடந்ததா என்பதை அறிய, உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனைக்கு தான் உள்படுத்தப்பட்டதாகவும், பிறகுதான், அந்த சோதனை தடை செய்யப்பட்டது என்பதை தான் அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இரட்டை விரல் பரிசோதனை முறைக்கு கடும் எதிர்ப்புகள் உலகம் முழுக்க எழுந்து வருகிறது. இந்த முறையை மேற்கொள்ள கூடாது என்று 2014லேயே மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, கோவை விமானப்படை பயிற்சி நிலையத்தில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் அதிகாரியை பரிசோதித்த முறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட இரட்டை விரல் பரிசோதனை முறையை பயன்படுத்தியதற்காக தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உண்மையா என அறிய இரட்டை விரல் சோதனை மேற்கொண்டது உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு எதிரானது என்று கூறி விமானப்படை தலைமை தளபதி நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நவீன பரிசோதனை முறைகள் குறித்து இந்திய விமானப்படை மருத்துவர்களுக்கு விழிப்புணர்வூட்ட மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

Related Stories:

More
>