×

சமாதானம் ஆகிறார் சித்து? : பஞ்சாப் முதல்வர் சன்னியுடன் சந்திப்பு... ராஜினாமாவை சித்து திரும்பப் பெறுவார் எனத் தகவல்!!

சண்டிகர் : ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் பஞ்சாப் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய சித்துவை சமாதானம் செய்யும் முயற்சியில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தீவிரம் காட்டி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த கேட்பன் அமரீந்தர் சிங்கிற்கும் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ்  மேலிட அழுத்தம் காரணமாக அமரீந்தர் சிங் பதவி விலகியதை அடுத்து, சித்துவின் ஆதரவாளரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவருமான சரண்ஜித் சிங் முதல்வராக்கப்பட்டார்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கத்தில் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. குறிப்பாக பஞ்சாப் துணை முதல்வர் Sukhjinder Randhawaவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டதை சித்து விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதிகாரிகள் நியமனத்திலும் சித்துவின் பரிந்துரையை சரண்ஜித் சிங் கேட்கவில்லை என்றும் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சி தலைமைக்கு சித்து கடிதம் அனுப்பினார். அதிருப்தியில் உள்ள சித்துவை சமாதானம் செய்ய பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் முயற்சி செய்து வருகிறார்.

இதனிடையே பஞ்சாப் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருப்பதாக சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் முதல்வரை சந்திக்க இருப்பதாக சித்து அதில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் பஞ்சாப் அடுத்த 5 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் அடுத்தடுத்து உட்கட்சி பூசல் அரங்கேறி வருகின்றன. இதனிடையே நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அமரீந்தர் சிங், இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலக இருப்பதாகவும் ஆனால் பாஜகவில் இணையும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Sidhu ,Punjab ,Chief Minister ,Sunny , சித்து
× RELATED நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியை...