மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கழிப்பறை வடிவமைப்பு : மதுரை எலக்ட்ரீஷியன் அசத்தல்

மதுரை: மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதில் ‘சவாலானதாக’ இருக்கும் கழிப்பறையை, மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ‘சாதகமானதாக’ வடிவமைத்து அசத்தி இருக்கிறார்.மதுரை பீபீ குளத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஜாக் (51). எலக்ட்ரீஷியன். இவர் உருவாக்கிய ஒரே நேரத்தில் ‘சாதம், குழம்பு’ சமைக்கும் குக்கர், ஜனாதிபதி விருதினைப் பெற்றுத் தந்தது. பார்வையற்றோருக்கு ஒலி, ஒளி தரும் வாக்கிங் ஸ்டிக், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் இயந்திரம் உள்ளிட்ட மொத்தம் 52 கருவிகளை வடிவமைத்து அசத்தியுள்ளார். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக நவீன கழிப்பறையை வடிவமைத்துள்ளார்.சுவற்றில் 8 அடி கொண்ட ஒன்றரை இஞ்ச் அகலமிக்க ஒரு இரும்பு பைப்பை பொருத்தி, அதில் கீழே 2 இஞ்ச் கூடுதல் பைப்பில் ஸ்டாண்டை நிறுத்தி அதில் கழிப்பறை சில்வர் கோப்பையை இணைத்து, இதனை மேலும், கீழும் நகர்த்தி நிறுத்திக்கொள்ள இரும்பு பைப்பில் 2 இஞ்ச் இடைவெளியில் உள்ள துளையில் மாட்டி நிறுத்திக்கொள்ளும் விதமாக ‘கிளாம்ப்’ அமைத்து இந்த கழிப்பறை வசதியைத் தந்துள்ளார்.

‘‘இதன் மீது 100 கிலோ எடை கொண்ட நபரும் அமரலாம். மேலும் கீழும் நகர்த்தவும், ஒரத்தில் அமரவும் வசதி இருக்கிறது. கைப்பிடி வசதியும் இருக்கிறது. வீட்டுக்குள் அல்லது பொது இடங்களில் தண்ணீர் குழாய் இணைப்புடன் கழிப்பறையை அமைத்துக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் செலவிட்டு ஒரு ஹைட்ராலிக் கருவியை இணைத்துக் கொண்டால் ஸ்விட்ச் மூலம் மேலும், கீழும் இறக்கி ஏற்றலாம்’’ என்கிறார்.‘‘மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கழிப்பறைக்குச் சென்று திரும்புவதே ஒரு சவாலான விஷயம். ஒருமுறை மாற்றுத்திறனாளி முதியவர், கழிப்பறைக்கு சென்று திரும்பும் கஷ்டத்தைச் சொன்னார். அதை மனதில் வைத்தே இந்த கழிப்பறையை வடிவமைத்துள்ளேன். மிகுந்த சிரமத்திற்கிடையே இதை உருவாக்கி உள்ளேன். என் கண்டுபிடிப்புகளை அரசு ஏற்று, இதற்கான தயாரிப்பு உதவிகளை வழங்கிட வேண்டும்’’ என்றார்.

Related Stories:

More
>