ஆரணி அடுத்த கீழ்பட்டு ஊராட்சியில் மேற்கூரை, கட்டிடம் சேதமடைந்து ஆபத்தான அரசு பள்ளி

* புதிய வகுப்பறைகள் கட்ட கோரிக்கை * பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

ஆரணி:  ஆரணி அடுத்த கீழ்பட்டு ஊராட்சியில் மேற்கூரைகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கீழ்பட்டு ஊராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலவழி கல்வியில் 290க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டிலும் ஏராளமான மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். இப்பள்ளியில் 5 வகுப்பறைகள் உள்ளன.இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 வகுப்பறைகளின் மேற்கூரைகள் சேதமடைந்து, சுவற்றில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்பட்டது. எனவே, மாணவர்களை பள்ளி வளாகத்தில் மண் தரையிலும், மரத்தடியிலும் அமர வைத்து வகுப்புகள் நடத்தி வந்தனர். மேலும், மழை மற்றும் வெயில் காலங்களில் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

எனவே, சேதடைந்துளள்ள வகுப்பறை கட்டிடங்களை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டி தரக்கோரி சேத்துப்பட்டு பிடிஓ அலுவலகம், போளூர் கல்வி மாவட்டம் மற்றும் கலெக்டரிடம் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் எந்த கவலையும் இன்றி இருந்தனர். வரும் நவம்பர் 1ம் தேதி இப்பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், வகுப்பறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து, கட்டிங்களில் விரிசல் ஏற்பட்டு, போதிய இடவசதி இல்லாத நிலையில், தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதால் பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் தயக்கம் காட்டிவருகின்றனர்.

எனவே, பள்ளியை திறப்பதற்கு முன்பு, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து தனிகவனம் செலுத்தி, சேதமடைந்துள்ள வகுப்பறை கட்டிங்களை அகற்றிவிட்டு புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும். குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், கடந்த 27ம் தேதி கீழ்பட்டு கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, மாணவர்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிமகன்களின் பாராக மாறிய வகுப்பறைகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி திறக்கப்படாததால் இங்குள்ள வகுப்பறைகள் குடிமகன்களின் பாராக மாறியுள்ளது. வகுப்பறைகளில் அமர்ந்து மது குடிப்பது, பின்னர் மதுபாட்டில்களை அங்கேய வீசிவிட்டு செல்வது, அங்குள்ள கதவு, ஜன்னல், பேன், விளக்குகளை உடைத்து சேதப்படுத்துவது என சமூக விரோத கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்

கீழ்பட்டு ஊராட்சியில் கடந்த 1980ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைவிட, இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

More