நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ரூ.10 கோடியில் பிரமாண்ட அறிவியல் தொழில்நுட்ப காட்சி அரங்கு: மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்

நெல்லை: நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பில் பிரமாண்ட அறிவியல் தொழில்நுட்ப காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள ரோவர் மற்றும் இஸ்ரோ ராக்கெட் மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல், கணித மாதிரிகளும், சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் திறக்கப்பட உள்ளது.நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு சீரமைப்பு திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு முக்கிய பணியாக நெல்லை வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்தின் முன் இருபகுதிகளிலும் பிரமாண்ட அறிவியல் தொழில்நுட்ப காட்சி, உள் மற்றும் வெளியரங்குகள் ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலின் மைய வாயில் பகுதியின் இருபுறமும் இருந்த இடத்தில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் இந்த காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்குகளில் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் போன்றவைகள் குறித்து கற்றுக் ெகாள்ள பல்வேறு மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் தொடர்பானவைகள் ஒரு பகுதியிலும், கணிதம், பொறியியல் தொடர்பானவை மற்றொரு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு பகுதிக்கும் செல்ல சிறப்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பாலம் அதிநவீன வசதியில் மும்பைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதல் முறையாக பிவிசி துணி போன்ற பொருளால் அமைக்கப்பட்டுள்ளது. இது மழை வெயில், காற்றில் பாதிக்காது. ரோபோட்டிக் மையத்தில் கல்லூரி சென்று பயிலக்கூடிய விபரங்களை பள்ளிப்பருவ மாணவர்கள் இங்கேயே கற்று தெளிவு பெற வாய்ப்புள்ளது. நவீன ரோபோவின் செயல்பாடுகள் மாதிரிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் 3 அறிவியல் பயிற்றுனர்களும் கற்றுத்தரவும் வழிகாட்டவும் பணியில் இருப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலாவாகவும் பொதுமக்களும் இங்கு வந்து பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய 2 ரோவர் மாதிரிகள் மற்றும் இஸ்ரோவின் 2 ராக்கெட் மாதிரிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன. மற்றொரு அரங்கில் ட்ரோன் செயல்பாடுகள், அதன் பயன்கள் ேபான்றவை செய்முறை மூலம் கற்றுத்தரப்படும்.

இந்த அறிவியல் தொழில் நுட்ப மையம் சென்னையை சேர்ந்த ஆன்கிடைன் என்ற அமைப்பினர் அமைத்து மாநகராட்சி வசம் ஒப்படைத்துள்ளனர். பணி நிறைவடைந்துள்ளதால் இங்கு புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் போது இந்த அறிவியல் தொழில்நுட்ப காட்சி அரங்கும் வெகுவிரைவில் திறக்க வாய்ப்புள்ளது. இதற்கு மாநகராட்சி சார்பில் பார்வையிட குறிப்பிட்ட நுழைவு கட்டணமும் உள்ளே அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கூடத்தில் பயிற்சி மேற்கொள்ள தனி கட்டணமும் வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.நெல்லையில் ஏற்கனவே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மாவட்ட அறிவியல் மையம் செயல்படும் நிலையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவியல் தொழில்நுட்ப மையமும் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு இது கல்வி சார்ந்த உதவியை தரும் என தெரிகிறது.

Related Stories:

More
>