×

ஆண்டிபட்டியில் முருங்கைக்காய் விளைச்சல் சரிவு: விலை இருந்தும் வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் விளையும் முருங்கை காய்கள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் நல்ல விலை இருந்தும் வரத்து இல்லாததால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திம்மரசநாயக்கனூர், சிலுக்குவார்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கை விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் தரத்திலும், ருசியிலும் மேம்பட்டு இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஆண்டிப்பட்டி பகுதியில் வந்து முகாமிட்டு முருங்கைக்காய்களை வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு விளையும் முருங்கைக்காய்கள் குளிரூட்டு நிலையங்களில் வைக்காமலேயே ஒருவாரத்திற்கு கெட்டு போகாமல் இருப்பதால் ஆண்டிப்பட்டி காய்களுக்கு மார்க்கெட்டில் எப்போதும் மவுசு இருக்கும். ஆண்டிப்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, கொம்புக்காரன்புலியூர் பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட லாரிகளில் முருங்கைக்காய்கள் டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர சில வெளிநாடுகளுக்கும் ஆண்டிப்பட்டி முருங்கை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது ஒருகிலோ முருங்கை ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முருங்கையை பொறுத்தவரையில் வறட்சியான காலநிலையில் அதிகம் விளையும் தன்மை கொண்டது. தற்போது தேனி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் முருங்கை விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. ஆனால் முருங்கைக் காய்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது. நல்ல விலை கிடைத்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் முருங்கை பறிக்கும் கூலி, பேக்கிங் சார்ஜ், போக்குவரத்து செலவு அதிகரித்து உள்ளதால் நல்ல விலை இருந்தும் விவசாயிகளுக்கு போதுமான தொகை கொடுக்க முடியவில்லை என்றும், தங்களுக்கும் அதிக லாபம் கிடைக்கவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் போக்குவரத்து செலவை குறைப்பதுடன், தேனி மாவட்டத்தில் முருங்கைக்காய்களை இருப்பில் வைக்கும் கிட்டங்கி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Andipatti , Decline in drumstick yields in Andipatti: Farmers worried over lack of supply despite prices
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...