×

தருமபுரி அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் தீடீரென ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

சேலம் : சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நலத்திட்டங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தருமபுரிக்கு புறப்பட்டார்.அப்போது தர்மபுரி மாவட்டத்திற்கு செல்லும் வழியில் திடீரென்று முதலமைச்சரின் வாகனத்தை நிறுத்தச் சொல்லி வழியில் அமைந்துள்ள  B2 அதியமான் கோட்டை காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அங்கு, காவல் நிலையத்தின் உள்ளே முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 10.8.1998ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டை பார்வையிட்டார். அங்கிருந்த எஸ்ஐ இருக்கையில் முதல்வர் அமர்ந்தார். அந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் பெண் போலீசாரிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா, தேவையான போலீசார் உள்ளனரா என கேட்டறிந்தார். தினசரி நடக்கக்கூடிய பொதுநாள் குறிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

பொதுமக்களிடம் வாங்கப்படும் புகார் மனுக்கள் குறித்து எப்படி விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள் என கேட்டார். விசாரணை நடத்தி சிஎஸ்ஆர் வழங்குவோம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு இப்போது குறைகள் எதுவும் இல்லை. நீங்கள் போலீசாருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என கூறியது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என போலீசார் கூறினர். போலீஸ் ஸ்டேஷனில் 10 நிமிடங்கள் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்த முதல்வர் போலீஸ் ஸ்டேஷன் அருகே இருந்த காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர் குடும்பத்தினர் மற்றும் சிறுமிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கு நின்ற சிறுவர்கள், தங்களுக்கு விளையாட்டுப் பூங்கா வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி கூறினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தர்மபுரி சென்றார். இரவு தர்மபுரி அதியமான் அரண் மனையில் தங்கினார்.


Tags : Stalin ,Dharamapuri Athyamancota Police Station , முதல்வர் மு.க.ஸ்டாலின்
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...