×

அதானி துறைமுகம், தொழிற்சாலைகளால் அதிகரிக்கும் கடல் அரிப்பு!: நிலத்தடி நீர் பாழாவதாக மீனவர்கள் வேதனை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளியில் அதிகளவில் கடல் அரிப்பு ஏற்படுவதாக மீனவ அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி மீனவ கூட்டமைப்பினர் காட்டுப்பள்ளியில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம், எல்.என்.டி. கப்பல் கட்டும் தளம், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை ஆகியவை கடலுக்குள் கற்களை கொட்டி உள்ளதால் கடந்த சில மாதங்களாக கடல் அரிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக மீனவ அமைப்பினர் தெரிவித்தனர்.

தனியார் துறைமுகம் கடலுக்குள் ராட்சத பாறைகளை கொட்டியுள்ளதால் கடல் அதிகளவில் நிலப்பரப்பை நோக்கி முன்னேறுவதாகவும், கடல் அரிப்பால் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறிவருவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவ அமைப்பினர் தெரிவித்தனர். அதானி துறைமுகம் மேலும் விரிவாக்கப்படும் பட்சத்தில் சுற்றுப்பகுதிகளில் உள்ள நகரங்கள் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். எனவே பழவேற்காடு முதல் காட்டுப்பள்ளி வரையிலான பகுதியை உயர் கடல் அரிப்பு மண்டலம் என அறிவித்து மீனவ கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Adani port , Adani port, factory, sea erosion
× RELATED அதானி துறைமுகத்தில் சிக்கிய பல கோடி...