பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் : ஆட்சியாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

சென்னை : பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் வருகின்ற அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க மேற்கொள்ள வேண்டிய அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளர். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 9 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு மேற்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பதற்றமான பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்பை அதிகரிக்க ஆட்சியாளர்களுக்கும் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். அங்கு கூடுதல் காவலர்களை அமைத்தல், மூன்று அடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துதல், சோதனை சாவடி அமைத்தல் போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

6ம் தேதி நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவில் 17,130 காவல்துறையினரும் 3,405 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 9ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 16,006 காவல்துறையினரும் 2,867 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்காளர் அல்லாதவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். வெளியேறாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>