உள்ளாட்சி தேர்தல் பணியால் இன்று விசாரணைக்கு ஆஜராக இயலாது!: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில்..!!

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணைக்கு இன்று ஆஜராக இயலாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஜூலை 22ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சொத்து ஆவணங்கள், 25 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

இன்று காலை 10 மணிக்குள் ஆலந்தூரில் இருக்கக்கூடிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராக இயலாது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் பணி காரணமாகவும், தேர்தல் பிரச்சாரம் காரணமாகவும் இன்று தன்னால் விசாரணைக்கு ஆஜராக இயலாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். எனவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடுத்தகட்டமாக எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்ற ஆலோசனையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Stories:

More
>