×

'சிங்கம்'வில்லன் டேனியின் கூட்டாளி நிஜத்தில் போதைப் பொருள் கடத்தல் : பெங்களூருவில் அதிரடி கைது!

பெங்களூரு: நடிகர் சூர்யாவின் சிங்கம் திரைப்படத்தில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் டேனியின் கூட்டாளியாக நடித்த நைஜீரிய நடிகர் மெல்வின் நிஜத்தில் போதைப் பொருள் கடத்தியதால் பெங்களூருவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.நைஜீரியாவைச் சேர்ந்த காக்விம் மெல்வின் சிங்கம் 2 படத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக நடித்தவர். சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் போதைப் பொருள் கடத்தல் பாத்திரத்தில் அதிகமாக நடித்தவர் காக்விம் மெல்வின். தமிழில் விஸ்வரூபம், சிங்கம் 2 ஆகியவற்றில் நடித்திருக்கிறார் மெல்வின்.

நடிப்பின் மீது கொண்ட காதல் காரணமாக மும்பையில் உள்ள நியூயார்க் பிலிம் அகாடமியில் சில ஆண்டுகள் நடிப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார். பின்னர் பெங்களூருவில் தங்கி தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தார்.நடிப்புத் தொழில் மூலமாக போதிய வருமானம் கிடைக்காத நிலையில், தனது நிழல் கதாபாத்திரத்தை நிஜமாக்கி பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். தனக்கு இருந்த தொடர்பை பயன்படுத்தி கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ய தொடங்கி உள்ளார் காக்விம். சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் போதைப் பொருள் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டது. அந்த கும்பல் காக்விம் மாணவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்வது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தன.

இதையடுத்து பெங்களூரு கேஜி அல்லி காவல்துறையினர் காக்விம் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் அவரிடம் இருந்து இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள், ஹாசிஸ் கஞ்சா எண்ணெய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம். மேலும் ரூ. 5,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றையும் மெல்வினிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். சினிமா பிரபலங்களுக்கு மெல்வின் போதைப் பொருட்களை சப்ளை செய்திருக்கிறாரா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Danny ,Bangalore , நடிகர் சூர்யா,போதைப் பொருள்,காக்விம் மெல்வின்
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை