×

வீடு தேடி வரும் பைக் சர்வீஸ்

நன்றி குங்குமம் தோழி

ஒருவரின் வீட்டில் சைக்கிளோ அல்லது காரோ போன்ற வாகனங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள் இருக்கும். இப்போது பெண்களும் பைக் போன்ற வாகனங்களை ஓட்ட பழகிவிட்டார்கள். அலுவலகம் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவியர், இல்லத்தரசிகளாக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இரண்டு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இரண்டு சக்கர வாகனம் கொஞ்சம் பழுதானாலும் நமக்கு என்ன ெசய்வதுன்னு தெரியாது. அதனை சரியான நபரிடம் பழுதுப் பார்க்க கொடுக்க வேண்டும். இதற்காகவே நமக்கான மெக்கானிக்கை நாம் தேர்வு செய்து வைத்திருப்போம். ஆனால் நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் மெக்கானிக்கை உடன் அழைத்து செல்ல முடியாது.

ஆனால், அவர்களை நாம் இருக்கும் இடத்திற்கு அழைக்க முடியும். நம்முடைய வாகனம் பழுதானாலோ அல்லது சர்வீஸ் செய்ய வேண்டும் என்றாலோ, நாம் இருக்கும் இடத்திற்கு மெக்கானிக்கினை அழைப்பதற்காகவே சில ஆப்கள் பயன்பாட்டில் உள்ளன.

727 மோட்டார் சைக்கில்ஸ்


நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே உங்களின் மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டருக்கு இந்த ஆப் மூலம் சர்வீஸ் செய்யலாம். இந்த ஆப் மூலம் நேரடியாக சர்வீஸ் சென்டருடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதால், நடுவில் தரகர்களின் பிரச்னைகள் இருக்காது. அனைத்து வாகனம் சார்ந்த சேவைகளும் குறிப்பிட்ட பட்டறைகளில் மற்றும் நிபுணர்களால் செய்யப்படுவதால், தரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாடிக்கையாளர்களின் திருப்தி உறுதியளிக்கப்படும்.

மேலும் வாகனங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்டு அதனை சீர் செய்து தரப்படும். அதற்கான கட்டணம் ஏதும் பெறப்படுவதில்லை. பழுது பார்ப்பதற்கான கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும். தற்போது சென்னையில் மட்டுமே இந்த ஆப் செயல்பட்டு வருகிறது. மற்ற நகரங்களில் கூடிய விரைவில் இதனை செயல்படுத்தும் திட்டம் உள்ளது.

இதில் உள்ள சிறப்பு அம்சங்கள்

* இந்த ஆப் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே வண்டிக்கான சேவைகளின் வேலை குறித்து முன்பதிவு செய்யலாம்.
* ஒரே நாளில் சர்வீஸ் செய்து தரப்படும்.
* உங்கள் வாகனத்திற்கு என்ன பழுதுள்ளது மற்றும் அதன் விவரங்களையும் இதில் குறிப்பிடும் வசதி இருப்பதால், மெக்கானிக் அதற்கு ஏற்ப வண்டியின் பிரச்னையை கையாள்வார்.
* ஒரு நாளைக்கு முன்பாகவே உங்கள் வண்டிக்கான சர்வீஸ் செய்வது குறித்த முன்பதிவு செய்ய வேண்டும்.
* உங்கள் வண்டிக்கு என்னென்ன சர்வீஸ் செய்யப்படுகிறது என்பதையும் இந்த ஆப் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

மிசா - யமஹா பைக் சர்வீஸ் ஆப்


இலங்கையில் யமஹா இரு சக்கர வாகனங்களுக்காகவே செயல்பட்டு வரும் சர்வீஸ் சென்டர். உங்களிடம் யமஹா வண்டி இருந்தால் போதும் நீங்கள் இங்கு சர்வீஸ் செய்வதற்கு ஏற்ற ஆப். இந்த ஆப் மூலம் சர்வீஸ் செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம். மேலும் இதனை கையாள்வதும் எளிது.

* முதலில் இந்த ஆப்பினை உங்களின் செல்போனில் டவுண்லோட் செய்யுங்கள்.

* அதன் பிறகு உங்களின் யமஹா வண்டிக்கு என்ன மாதிரியான சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே குறிப்பிடலாம்.

* சர்வீஸ் செய்யப்படும் நேரத்தையும் முன்கூட்டியே குறிப்பிட்டால், அதற்கு ஏற்ப வண்டியை அவர்கள் எடுத்து செல்வார்கள்.

* இதற்கான கட்டணத்தை ேநரடியாக செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆன்லைன் மூலமாகவோ அல்லது கிரெடிட் கார்ட் கொண்டும் கட்டணத்தை செலுத்தலாம். வண்டி பழுது பார்த்ததற்கான விலைப்பட்டியல் உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

*அனைத்தும் ஆன்லைனில் செயல்படுவதால், நேரம் மற்றும் பணமும் விரையமாகாது.

காரேஜ் டூ கர்


காரேஜ்டூகர், வாகனத்திற்கான மற்றொரு சேவை ஆப். வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து சேவைகளையும் குறைந்த மற்றும் நியாயமான விலையில் செய்து தரப்படும், அதுவும் உங்கள் வீடு தேடி வந்து செய்து தருகிறார்கள்.வாகனத்தை சர்வீஸ் செய்வது தான் ஒவ்வொரு வாகன ஓட்டிகளின் பெரிய வேலையாக உள்ளது.

இனி அந்த கவலை உங்களுக்கு இல்லை. உங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து உங்களின் வாகனத்தை பெற்றுக் கொண்டு சர்வீஸ் செய்து தருவதால், நீங்கள் அதற்காக மெக்கானிக்கை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. 50 சிசி ஸ்கூட்டர் முதல் எல்லா ரகமான இரண்டு சக்கர வாகனத்திற்கு இந்த ஆப் மூலம் பழுது பார்க்கலாம். இப்ேபாது காரேஜ்டூகர் ஆப்பினை உங்கள் செல்போனில் டவுண்லோட் செய்து பயன் பெறுங்கள்.

ஆட்டோசிஸ்ட்


கார் அல்லது இரண்டு சக்கர வாகனம் எதுவாக இருந்தாலும் குறைந்தபட்சம் ஐந்து வருடமாவது நல்ல நிலையில் இருப்பது அவசியம். அதற்கு நாம் அவ்வப்போது நம்முடைய வாகனம் சரியான நிலையில் உள்ளதா என்று கவனிக்க வேண்டும். அது பற்றி யோசிக்க எங்கு நேரம் இருக்குன்னு கேட்கலாம். அதற்கான சிந்தனையை தூண்டுவது தான் ஆட்டோசிஸ்ட் ஆப்பின் வேலை.

உங்களின் வாகனத்திற்கு எப்போது எஞ்சின் ஆயில் மாற்ற வேண்டும், டயர் தேய்ந்துவிட்டதா, பிரேக் சரியாக உள்ளதா, டயரில் எப்போது காற்று செலுத்த வேண்டும்... இது போன்ற நம்முடைய வாகனம் சார்ந்த சின்னச் சின்ன விஷயங்களை நமக்கு நினைவுப்படுத்தும். இதன் மூலம் நம்முடைய வாகனத்தை நாம் எப்போதும் புதிது போல் பார்த்துக் கொள்ள முடியும்.

எல்லாவற்றையும் விட உங்களின் வாகனம் குறித்த அனைத்து ஆவணங்களையும் இந்த ஆப் மூலம் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அதனால் கையில் நாம் அந்த ஆவணங்களை எப்போதும் எடுத்து செல்ல வேண்டும் என்ற அவசியம் இருக்காது. மொபைல் போன் இருந்தால் போதும். மேலும் நீங்கள் வாகனத்தை பழுத பார்க்க ெகாடுக்கும் போதும், அதற்கான ரசீதுகளையும் இதில் சேகரித்து வைக்க முடியும்.

சயாரா கேரேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்

சயாரா, டிஜிட்டல் முறையில் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை பழுது பார்க்க கிளவுட் அடிப்படையில், செயல்படும் ஆட்டோமொபைல் கேரேஜ் மேலாண்மை அமைப்பு. இந்த ஆப்பினை கணினி, iOS மற்றும் Android எதில் வேண்டும் என்றாலும் பயன்படுத்தும்படி வசதி செய்யப்பட்டுள்ளது.

‘ேகா கிரீன்’ என்ற சுற்றுப்புறத்தினை பாதுகாக்கும் முறையினை கையாள்வதால், அனைத்தும் டிஜிட்டல் முறையில் மட்டுமே செயல்படுகிறார்கள்.  அதாவது, விலைப்பட்டியல், பழுது பார்க்கப்படும் விவரங்கள்... என அனைத்தும் வாடிக்கையாளரின் மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்பப்படும். பராமரிப்பதும் எளிது மற்றும் எந்நேரமும் எந்த இடத்திலும் இதன் சேவையை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதன் முக்கிய அம்சங்கள்

*ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் டிஜிட்டல் அட்டை வழங்கப்படும். இதில் உங்களை பற்றியும் உங்களின் வாகனத்தை குறித்தும் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும்.

* இதன் மூலம் ஒவ்வொரு முறை பழுது பார்க்கும் போது, அதற்கான விலைப்பட்டியல் மற்றும் விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு எளிதில் அனுப்ப முடியும்.

* வாடிக்கையாளர்களின் அக்கறை முக்கியம் என்பதால், அவர்களுக்கு அடுத்து தங்களின் வாகனத்தை எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும் என்று நினைவுப்படுத்துவோம். காரணம் நாம் பயணிக்கும் வண்டி நன்றாக இருந்தால் தான் நம்மால் எதையும் சுலபமாக செய்து முடிக்கமுடியும்.

* சயாராவில் ஒவ்வொரு வாகனத்திற்கு ேதவையான உதிரி பாகங்களை கையிருப்பு வைத்திருப்பதால், எந்த பிரச்னை என்றாலும் உடனடியாக கவனிக்கப்படும்.

* எல்லாரும் திறமையானவர்கள் தான். அதனால் அவர்களின் திறமையினை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளவும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு வேலையாட்களின் வாரம் அல்லது மாத செயல்திறன் குறித்த தகவல்களும் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இனி உங்கள் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை சுலபமாகவும் அதே சமயம் டிஜிட்டல் முறையிலும் பழுது பார்த்துக் கொள்ளலாம்.

கார்த்திக் ஷண்முகம்

Tags :
× RELATED மாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்!