அரசின் நலத்திட்டங்களை பெற்றுத்தர முழு மூச்சுடன் பாடுபடுவேன்: வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன் உறுதி

மதுராந்தகம்: மதுராந்தகம் தெற்கு ஒன்றியம்  12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணனை ஆதரித்து, சென்னை திருவிக நகர் திமுக எம்எல்ஏ தாயகம் கவி, கிராமப்புற வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று தர முழு மூச்சுடன் பாடுபடுவேன் என வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், பொதுமக்களுக்கு உறுதியளித்தார். செங்கல்பட்டு 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி ஸ்ரீதரன் ஆகியோரின் அலுவலக திறப்பு விழா மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் தச்சூர் கிராமத்தில் நேற்று நடந்தது.

இதில் சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ தாயகம் கவி, கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து,  தச்சூர் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் நடந்து சென்று, கிராம மக்களை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், கிராம மக்களிடம் பேசுகையில், குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு, பஸ் வசதி, சாலை வசதி ஆகியவற்றை உடனுக்குடன் செய்து தர நடவடிக்கை எடுப்பேன்.

தமிழ்நாடு அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை, திருமண நிதி உதவி, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் உள்பட அரசின் நலத்திட்டங்களை பெற்றுத்தர முழு மூச்சுடன் பாடுபடுவேன் என உறுதியளித்தார். அவருடன், ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சசிரேகா, கட்சி நிர்வாகிகள் ஏகாம்பரம், தணிகை அரசு, பத்மா செல்வராஜ், சங்கர், இளம்பாரதி, சசிகுமார், பத்மநாபன், ஜெரோம், ஆரோக்கியசாமி, பாண்டியன், ஜான், தனபால், நந்தகோபால், மூர்த்தி, மனோகர் சாமிக்கண்ணு, ராமு, பிச்சமுத்து உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

More