நீ என்ன சொல்றது; நான் என்ன கேட்கறது சூப்பர்சோனிக் ரக ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா: அமெரிக்கா, தென்கொரியா வழக்கம்போல் கூப்பாடு

சியோல்:  உலக நாடுகளின் கண்டனத்தையும் மீறி வடகொரியா நேற்று, ஒலியை விட வேகமாக பாய்ந்து  தாக்கும் ஏவுகணையை சோதனை செய்தது. அமெரிக்காவையும், தனது அண்டை நாடான தென்கொரியாவையும் வடகொரியா மிகப்பெரிய எதிரிகளாக கருதுகிறது. குறிப்பாக, அணு ஆயுத பலத்தை பெறும் வடகொரியாவின் கனவுக்கு அமெரிக்கா மிகப்பெரிய தடையாக இருக்கிறது. வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை நிறுத்துவது தொடர்பாக, அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடைசியாக 2019, பிப்ரவரியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பிறகு, பேச்சுவார்த்தை முறிந்தது. அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வரும்படி கிம்மை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பல்வேறு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஒலியை விட வேகமாக  பாய்ந்து தாக்கக் கூடிய சூப்பர்சோனிக் ரக ஏவுகணையை வடகொரியா நேற்று ஏவி வெற்றிகரமாக சோதனை செய்தது.

இதற்கும் அமெரிக்கா, தென்கொரிய நாடுகள் வழக்கம்போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதை அலட்சியம் செய்துள்ள வடகொரியா, ‘இது, முதல் கட்ட சோதனை தான். அடுத்தடுத்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்படும்,’ என்று அறிவித்துள்ளது.

* ஒலியின் வேகம் மணிக்கு 768 மைல்கள்.

* இதை விட அதிக வேகத்தில் பாய்ந்து தாக்கும்  ஏவுகணைகள் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் எனப்படுகின்றன.

Related Stories: