×

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள்: தேசிய தேர்வுகள் வாரியம் வெளியீடு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் வாரியம் வெளியிட்டது. இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உட்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. 2021-22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்திருந்தது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிப்பு குறைந்ததால், ஒத்திவைக்கப்பட்ட தேர்வு கடந்த 11ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 270 நகரங்களில் 679 மையங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஆன்லைனில் நடந்தது. தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 20 ஆயிரம் பேர் உட்பட இந்தியா முழுவதும் 1.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை https://nbe.edu.in/, https://www.natboard.edu.in/ ஆகிய இணையதளங்களில் தேசிய தேர்வுகள் வாரியம் (என்டிஏ) நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.

800 மதிபெண்களுக்கு நடந்த நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினருக்கு (பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினர் உட்பட) 302 மதிப்பெண்ணும், ஓபிசி, எஸ்சி, எஸ்சி, பிரிவினர்களுக்கு (மாற்றுத்திறனாளிகள் உட்பட) 265 மதிப்பெண்ணும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 283 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் நடத்துகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தவுள்ளது. இதே நடைமுறையை பின்பற்றி பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

Tags : National Examinations Board , NEED Exam Results for Postgraduate Medical Courses: Published by National Examinations Board
× RELATED நீட் முதுநிலை தகுதி பூஜ்ஜியமாக...