×

போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

சென்னை: போலி பத்திரப்பதிவை பதிவாளர் ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து இருப்பதாக பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளர்கள்,  டிஐஜிக்களுக்கு வழங்கப்படும் சட்ட முன் வடிவை கடந்த மாதம் 2ம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார். அதில், போலி பத்திரப்பதிவு தொடர்பாக மாவட்ட பதிவாளர் விசாரணை செய்து ரத்து செய்யலாம். அதன்பிறகும் பாதிக்கப்பட்டால் ஐஜியிடம் முறையிடலாம். அதன்பிறகு செயலாளர் வரை முறையிடலாம். போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும், அபராதம் வசூலிக்கவும் சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தொடர்ந்து, இந்த சட்டத்திருத்தம் ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் பெற்று, பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது.  ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகு சட்டதிருத்தம் அமலுக்கு வரும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வரும் பட்சத்தில் இனி வருங்காலத்தில் போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை. பதிவுத்துறை மூலம் உரிய விசாரணை நடத்தி போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு கால விரயம் ஏற்படுவது தவிர்க்க முடியும்’ என்றார்.

Tags : Governor , Governor approves bill to repeal forged deed
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...