கீழ்ப்பாக்கத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான 49 கிரவுண்ட் சொத்து மீட்பு: அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இந்த நிகழ்வின் போது, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ஜெயா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம்  ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமாக உள்ள 49  கிரவுண்ட் நிலம்  இந்து சமய அறநிலையத்துறையால் சுவாதீனம் செய்யப்பட்டது.   இந்த இடத்தில் உள்ள கட்டிடத்தை தொன்மை மாறாமல் வேறு  பயன்பாட்டிற்கு கொண்டு வர கட்டிட வல்லுனர்களுடன் ஆய்வு செய்ய  ஒப்படைக்கவுள்ளோம். அவர்களது ஆலோசனை பெற்று கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை  பலப்படுத்துவதா, கட்டிடத்தை அகற்றுவதா என்பது குறித்து முடிவு  செய்யப்படும்.

இந்த இடத்தை பொறுத்தவரையில் சுமார் 98 ஆண்டுகள் குத்தகைக்கு  விடப்பட்ட இடம். இந்த குத்தகைதாரர் மறைந்த பிறகு அவரின் வாரிசுகள் தபால்  துறைக்கு வாடகைக்கு விட்டனர். அவர்கள் வாடகைக்கு விட்டு அந்த வாடகையை  பெற்று வந்தார்களே தவிர கோயிலுக்கு வாடகை செலுத்தவில்லை. அந்த வகையில் ரூ.12 கோடி வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. அதையும் வசூலிப்பதற்கு முறையாக  நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்.  மயிலாப்பூர், திருப்போரூர், மதுரவாயல் போன்ற பகுதிகளில் கோயிலுக்கு சொந்தமான ரூ.40 கோடி  மதிப்பிலான சொத்துகளை சட்டத்தின் மூலம் மீட்டுள்ளோம். சட்டமன்ற  மானியக்கோரிக்கையில் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்படும் என்று  அறிவித்தோம். இப்போதே  ஆயிரம் கோடியை தாண்டி விட்டது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 150 கிரவுண்ட்டிற்கு மேல் உள்ளது. ஏற்கனவே, தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட பள்ளி  கட்டிடம் மற்றும் மைதானத்துக்கு பல கோடி வாடகை பாக்கி தராததால் சுவாதீனம் செய்துள்ளோம். இதுவே 50 கிரவுண்ட் ஆகும். இப்போது 49 கிரவுண்ட் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 கிரவுண்ட் மீட்கப்படும். தற்போது வாடகை செலுத்தாதவர்கள், உள் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள், புதிதாக ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து கோயில் சொத்துகளை மீட்டு வருகிறோம். மீட்கப்பட்ட இடங்கள் மேலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்துஅறநிலையத்துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்படும். இந்து அறநிலையத்துறைக்கு உள்ள அதிகாரத்தின் படியும் அர்ச்சகர்களை நியமிக்க தக்கார்கள் மற்றும் இணை ஆணையர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. கோயில்களில் 2011ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க இந்து அறநிலையத்துறை தயாராக உள்ளது. திருச்செந்தூர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கையின் அடிப்படையில் நேற்றிலிருந்து எளிதாக தரிசனம் செய்ததாக முகநூலில் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

More