×

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 39,408 காவலர்கள் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுவார்கள்

* பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
* மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: பதற்றமான மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தலின் போது பாதுகாப்புப் பணியில் காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 39,408 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பதற்றமான மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்துதல், கூடுதல் காவலர்களை நியமித்தல், சோதனைச் சாவடிகள் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துதல், மொபைல் டீம் அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தலில் 6.10.2021ல் நடைபெறும் முதலாம் கட்ட வாக்குப்பதிவின் போது 17,130 காவல் துறையினர், 3,405 ஊர்க்காவல் படையினரும், 9.10.2021 அன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவின் போது 16,006 காவல் துறையினர், 2,867 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 39,408 காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 4.10.2021 மாலை 5 மணிக்கும் பின்னரும், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 7.10.2021 மாலை 5 மணிக்கு பின்னரும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Home Guard ,9 District Rural Local Election Security , The Home Guard will deploy 39,408 police personnel in the 9 District Rural Local Election Security
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா