மாஜி அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: கடந்த 1991-1996 அதிமுக ஆட்சி காலத்தில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும் வழக்கறிஞருமான பாபு, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப்பணத்தில் ரூ.15.45 லட்சம் மோசடி செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணை காலத்தில் சமூக நலத்துறை முன்னாள் செயலாளர் கிருபாகரன் காலமானார். இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி அலிசியா நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது, இந்திரகுமாரி, பாபு, சண்முகம், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். காலை 11 மணிக்கு நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், இந்திரகுமாரி அவரது கணவர் பாபு, ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை விபரத்தை நீதிபதி அறிவித்தார். அதில்,  முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். வெங்கடகிருஷ்ணன் விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories:

More
>