கொரோனா தடுப்பு பற்றி கடிதம்: புதுகை மாணவிக்கு ஐநா சபை பாராட்டு

கறம்பக்குடி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடிதம் அனுப்பிய கறம்பக்குடி மாணவிக்கு  ஜ.நா.சபை செயலகம் பாராட்டு தெரிவித்துள்ளது. அதில் ஆக்கப்பூர்வமான கருத்து  என புகழாரம் சூட்டி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கலியராயன் விடுதியை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகள் கவுரி(16). இவர் தஞ்சை மாவட்டம், வெட்டுவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே சமூக அக்கறை உள்ள இந்த மாணவி 8ம் வகுப்பு படிக்கும் போதே கிராம வளர்ச்சி திட்டம், புள்ளி விபர பதிவேடு தயாரிப்பு குறித்து ஆய்வறிக்கை தயாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியிருந்தார். அவரது இந்த ஆய்வறிக்கையை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டியதோடு அதை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மாணவி கவுரி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஐ.நா.சபை பொதுச்செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் உலகையே உலுக்கி வரும் கொரோனா பெரும் தொற்றால் சுகாதார கட்டமைப்பில் பின்தங்கி உள்ள வளர்ச்சி அடையாத நாடுகளுக்கு வளரும் நாடுகள் உதவி செய்வது குறித்தும், உலக அளவில் சுகாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்து இருந்தார். தற்போது இந்த ஆய்வு கடிதம் குறித்து ஐ.நா.சபை செயலகத்தில் இருந்து மாணவி கவுரிக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் உலக அளவில் பொது சுகாதாரம் பேணுவதில் ஆர்வம் காட்டுவது பாராட்டுகுரியது எனவும், ஆக்கப்பூர்வமான கருத்து கவனத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவி கவுரி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து மாணவி கூறுகையில், கிராம வளர்ச்சி திட்ட அறிக்கையை மத்திய, மாநில அதிகாரிகளுக்கு அனுப்பியபோது யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடினோம். இப்போது,  பொருளாதாரத்தில் பின் தங்கிய சாமானிய மக்கள் வசிக்கும்  ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை அதிகளவில் விநியோகிப்பது பற்றி கடிதம் எழுதி இருந்தேன். எனது கடிதத்தை அங்கீகரித்து ஐ.நா.சபை பாராட்டியிருப்பது பெருமையாக உள்ளது என தெரிவித்தார். மாணவி கவுரிக்கு சக மாணவிகள், கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Related Stories:

More
>