×

பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள அம்ரிந்தர் சிங் அமித்ஷாவுடன் சந்திப்பு..!

டெல்லி: பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அம்ரிந்தர் சிங் சந்தித்துள்ளார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் காங்கிரஸின் அம்ரிந்தர் சிங் இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்திப்பார் எனக் கூறப்பட்டது.

இதற்கிடையே தற்போது அவர் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் தற்போது சந்தித்து வருகிறார். பஞ்சாப் மாநில முதல்வராக 8 ஆண்டுகள் பதவி வகித்த கேப்டன் அம்ரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.  கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸில் அவருக்கும் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுவந்த நிலையில் கட்சி மேலிட அறிவுரையின்படி அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பிய அம்ரிந்தர் சிங் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியில் நான் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். நான் தொடர்ந்து காங்கிரஸ் நபர்தான். அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று எனது ஆதரவாளர்களிடம் பேசி முடிவு செய்வேன்’ எனக் கூறியிருந்தார்ர்.

இதையடுத்து அவரது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பல ஊகங்கள் இருந்து வந்தன. புதிதாகக் கட்சி தொடங்குவார் எனபலர் கூறி வந்த நிலையில் தற்போது அவர் டெல்லியில் உள்ள அமித்ஷாவை அவரது இல்லத்தில் தற்போது சந்தித்து வருகிறார்.இதையடுத்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானதாகத் தெரிகிறது.

Tags : Amrinther Singh Amitsha ,Delhi ,Principal of Punjab , Punjab, Amrinder Singh, Amit Shah, Meet
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு