×

குடும்ப வறுமை காரணமாக மயானத்தில் எரியூட்டும் பணியில் முதுகலை பட்டதாரி: உதவிக்கரம் நீட்ட கோரிக்கை

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ரயில்வே காலனியை சேர்ந்தவர் கருத்தகாளை (எ) முருகேசன். இவர், மனைவி பஞ்சவர்ணத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக மானாமதுரையில் மயானங்களில் பிணங்களை எரியூட்டும் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். கடைசி மகன் சங்கரை தவிர மற்ற 4 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

வறுமையான குடும்ப சூழலிலும் சங்கர் (34), தந்தைக்கு உதவியாக மயான தொழிலுக்கு சென்று கொண்டே எம்எஸ்சி பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார். சங்கருக்கு திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் இறந்த பிணங்களை எரியூட்டவும், இறுதி சடங்குகளை செய்யவும் உதவிகரமாக இருந்தார். இச்சேவையை பாராட்டி சென்னையை சேர்ந்த சர்வதேச தமிழ் பல்கலைக்கழக அமைப்பு, இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சங்கர் கூறுகையில், ‘‘பிணங்களை எரியூட்டும் வேலை இல்லாத நாட்களில், தனியார் பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியராக உள்ளேன். குறைந்த சம்பளமே பெறுவதால் பிணங்களை எரியூட்டும் வேலையை செய்ய வேண்டியுள்ளது. தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், எனக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமான அடிப்படையில் ஏதாவது ஒரு அரசு பணி வழங்கினால் குடும்ப வறுமையில் இருந்து மீண்டு விடுவேன்,’’என்றார்.

Tags : Mayan , Family Poverty, Post Graduate, Demand
× RELATED வேலூர் பாலாற்றுக்கரையில் பலத்த...