அக். 11ம் தேதிக்கு மேல் பொறுத்திருக்க மாட்டேன்...: என்னுடன் கூட்டணி உண்டா? இல்லையா?: அகிலேஷ் யாதவுக்கு சித்தப்பா எச்சரிக்கை

எட்டவா: வரும் அக். 11ம் தேதிக்கு மேல் பொறுத்திருக்க மாட்டேன் என்றும், என்னுடன் கூட்டணி உண்டா? இல்லையா? என்ற அடிப்படையில், அகிலேஷ் யாதவுக்கு அவரது சித்தப்பா சிவ்பால் சிங் யாதவ் கெடு விதித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் நடந்த ஆட்சியின் போது கேபினட் அமைச்சராக சிவ்பால் சிங் யாதவ் இருந்தார். இவர், முலாயம் சிங் யாதவின் சகோதரர் (சித்தப்பா) ஆவார். அதன்பின் நடந்த தேர்தல் தோல்வி மற்றும் குடும்ப தகராறால் முலாயம் - சிவ்பால் இடையிலான அரசியல் உறவில் பிளவு ஏற்பட்டது.

தொடர்ந்து 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் கூட இணையவில்லை. அதன்பின், பிரகதீஷீல் சமாஜ்வாதி கட்சி (லோஹியா) என்ற பெயரில் சிவ்பால் சிங் யாதவ் புதிய கட்சியை தொடங்கி செயல்பட்டு வந்தார். அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கான முக்கிய அறிவிப்பை சிவ்பால் சிங் யாதவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அகிலேஷ் யாதவிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. வரும் அக். 11ம் தேதிக்குள் அகிலேஷிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால், மாநிலம் முழுவதும் 403 சட்டமன்ற தொகுதியிலும் எனது கட்சி போட்டியிடும். அப்போது எனது கட்சியின் வேட்பாளர்களின் பெயரை வெளியிடுவேன். பின்னர், பங்கே பீஹாரி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, அக். 12ம் தேதி மதுராவில் இருந்து எனது ரத யாத்திரையை தொடங்குவேன். இந்த யாத்திரையின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றிரவு தங்கி பிரசாரம் செய்வேன்’ என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

Related Stories:

More
>