×

அமரீந்தரை காலி செய்து சரண்ஜித்தை புதிய முதல்வராக்கிய சித்துவின் காங். தலைவர் பதவி 67 நாளில் கசந்தது ஏன்?: அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமாவால் பரபரப்பு

அமிர்தசரஸ்: பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற 67வது நாளில் தனது பதவியை சித்து ராஜினாமா செய்தார். அதனால், பஞ்சாப் அரசு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பிரச்னை கிளம்பி உள்ளது. பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், காங்கிரஸ் மாநில  தலைவர்களில் ஒருவராக இருந்த சித்துவுக்கும் இடையே அரசியல் ரீதியாக பல பிரச்னைகள்  இருந்தன. இதற்கிடையே மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக கடந்த ஜூலை 23ம்  தேதியன்று சித்து நியமிக்கப்பட்டார். அதற்கடுத்த சில வாரங்களில் முதல்வர்  பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். தொடர்ந்து புதிய முதல்வராக  சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன் புதிய  அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. இந்நிலையில், நேற்று திடீரென சித்து  தனது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி,  கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். புதிய தலைவராக பதவியேற்று நேற்றுடன் 67 நாட்கள் முடிந்த நிலையில், சித்து தனது பதவியை ராஜினாமா செய்தது, பஞ்சாப் காங்கிரசில் பெரும்  பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

எனினும், சித்துவின் ராஜினாமாவை காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை. கடந்த இரண்டு நாட்களாக தனது முக்கிய ஆலோசகரும், முன்னாள் காவல்துறை இயக்குநரான (டிஜிபி)  முகமது முஸ்தபாவுடன் சித்து ஆலோசனை நடத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாகவே நேற்று தனது ராஜினாமாவை அறிவித்தார். இவரது ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப் மாநில அமைச்சர்கள் பர்கத் சிங், அமரீந்தர் சிங் ராஜா வாரிங் ஆகியோர் சித்துவை அவரது பாட்டியாலா இல்லத்தில் சந்தித்தனர். மேலும், சித்துவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட பெண் அமைச்சரும், முகமது முஸ்தபாவின் மனைவியுமான ரசியா சுல்தானா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  மேலும், இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ்  பொதுச் செயலாளர்கள் கவுதம் சேத் மற்றும் யோகிந்தர் திங்க்ரா ஆகியோரும்  ராஜினாமா செய்துள்ளனர். பஞ்சாப் பொருளாளர் பதவியில் இருந்து குல்சார் சாஹல் விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, இன்று காலை பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அக். 1ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்படுவதாக அறிவித்த நிலையில், தற்போது முன்கூட்டியே அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சித்துவின் ராஜினாமாவை தொடர்ந்து சில அமைச்சர்கள் ராஜினாமா செய்தது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்துவின் திடீர் ராஜினாமாவின் பின்னணி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தனது பேச்சை கேட்கவில்ைல என்பதால் சித்து ராஜினாமா செய்தார்.

கட்சியின் மாநில தலைவராக இருந்தும், வெளியில் இருந்து வரும் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு முதல்வர் செயல்படுவதை அவர் விரும்பவில்லை. மேலும், கட்சியின் ‘டம்மி’ தலைவராக இருக்க அவர் விரும்பவில்லை. சிலருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது, அதிகாரிகளை நியமனம் செய்தது ஆகியவற்றில், சித்துவின் 5 விதமான பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. இந்த விஷயத்தில் கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்களின் தலையீடு உள்ளது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அரசு மற்றும் கட்சி  நடவடிக்கையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்; புதிய முதல்வர் சரண்ஜித் சிங்  சன்னி தனித்துவிடப்பட்டுள்ளார். மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை  சித்து ராஜினாமா செய்துவிட்டார். மத்திய பார்வையாளர்கள் ஆட்சி மாற்றத்தை  ஏற்படுத்தினார்களே தவிர, கட்சிக்குள் உள்ள பிரச்னையை தீர்க்கவில்லை’என்றனர்.

சித்து அளித்த ‘பதவி’ பரிந்துரைகள்
* பஞ்சாபின் முதல் தலித் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை, காங்கிரஸ் தலைமை தேர்வு செய்ய வலியுறுத்தியது சித்துதான். அவர் கூறியபடி சரண்ஜித் சிங் முதல்வரானார். ஆனால், சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவை துணை முதல்வராக்கியதில் சித்துவுக்கு உடன்பாடு இல்லை.
* கடந்த ஞாயிற்றுக்கிழமை 15 அமைச்சர்கள் புதியதாக பதவியேற்றனர். அவர்களில், தனது ஆதரவாளர்களான குல்ஜித் சிங் நாக்ரா மற்றும் சுர்ஜித் சிங் திமான் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. இது, சித்துவுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
* மணல் கொள்ளை ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ராணா குர்ஜித் சிங், கடந்த 4 ஆண்டுக்கு முன் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் சித்துவுக்கு பிடிக்கவில்லை.
* கட்சி தலைமையின் உத்தரவின்பேரில் துணை முதல்வரான ராந்தவாவுக்கு சக்திவாய்ந்த உள்துறைத் துறை ஒதுக்கீடு செய்தது, சித்துவுக்கும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
* சித்தார்த்தா சட்டோபாத்யாயாவை காவல்துறை தலைமை இயக்குனராகவும், டி.எஸ்.பட்வாலியாவை அட்வகேட் ஜெனரலாகவும் நியமனம் செய்ய முதல்வருக்கு சித்து பரிந்துரை செய்தார். ஆனால், அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. தற்போது காவல்துறை தலைமை இயக்குனராக இக்பால் ப்ரீத் சிங் சிஹோட்டாவும், அட்வகேட் ஜெனரலாக ஏபிஎஸ் தியோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Sidhu ,Kang ,Amarinder ,Saranjith , Punjab, Congress, agitation
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...