×

பஞ்சாப்பை வீழ்த்தி 5வது இடத்திற்கு முன்னேறியது மும்பை: பொல்லார்ட் எங்கள் முக்கிய வீரர்களில் ஒருவர்: கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

அபுதாபி: ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த 42வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் எடுத்தது. மன்தீப்சிங் 15, கிறிஸ் கெய்ல் 1, கேப்டன் கே.எல்.ராகுல் 21, நிகோலஸ் பூரன் 2, மார்க்ரம் (42 ரன், 29 பந்து, 6 பவுண்டரி), தீபக் ஹூடாவும் 28 ரன் அடித்தனர். மும்பை தரப்பில் பும்ரா, பொல்லார்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 136 ரன் இலக்கை துரத்திய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 8, சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். டி காக் 27, சவுரப் திவாரி 45 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஆட்டம் இழக்காமல் ஹர்திக் பாண்ட்யா 40 (30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), பொல்லார்ட் 15 ரன் (7 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுக்க மும்பை 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியுடன் பட்டியலில் 5வது இடத்திற்கு மும்பை அணி முன்னேறியது. 7வது தோல்வியை சந்தித்த பஞ்சாப்பின், பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கியது. வெற்றிக்கு பின் மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், ‘‘நாங்கள் எங்கள் திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை. மிகவும் கடினமாக போட்டியிடும் ஒரு வடிவத்தில் நீங்கள் விளையாடும் போது இவை நடக்கும். நாங்கள் விரும்பிய ஆட்டம் எங்களிடம் இல்லை, ஆனால் நாங்கள் பலமுறை இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளோம். இஷான் கிஷனை நீக்குவது கடினமாக இருந்தது. ஆனால் ஒரு குழுவாக எங்காவது ஒரு வாய்ப்பு தேவை என்பதை உணர்ந்தோம். சவுரப் திவாரி நன்றாக பேட்டிங் செய்தார். இஷான் மீண்டும் மும்பைக்காக விளையாட வேண்டும் என விரும்புகிறோம். பொல்லார்ட் எங்கள் முக்கிய வீரர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக எம்ஐயின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். அவர் தனது பந்துவீச்சுக்காக ஆட்டநாயகன் விருது பெற்றதால் மகிழ்ச்சியாக இருப்பார்’’, என்றார்.

பஞ்சாப் கேப்டன் ேக.எல்.ராகுல் கூறுகையில், ‘‘அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை எங்களால் சரியாக கையாள முடியவில்லை. அணியாக ஒருங்கிணைந்து விளையாடினால் நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். நாங்கள் போதிய ரன்கள் எடுக்கவில்லை. 170 ரன் கிடைத்திருக்க வேண்டும். இருப்பினும் பவுலர்கள் சவால் அளித்தனர். அடுத்த 3 ஆட்டங்கள் எங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்’’, என்றார்.


Tags : Mumbai ,Pollard ,Rohit Sharma , Punjab, Mumbai, IPL
× RELATED பாண்டியா பாவம்…தேற்றுகிறார் போலார்டு